2 ஆண்டுகளுக்கு பின் சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழா
2 ஆண்டுகளுக்கு பின் சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழா
UPDATED : ஆக 17, 2013 12:00 AM
ADDED : ஆக 17, 2013 10:44 AM
சென்னை: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சென்னை பல்கலையில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
சென்னை பல்கலையில், ஒவ்வொரு ஆண்டும், முதன்மை மற்றும் துணை பட்டமளிப்பு விழாக்கள் நடத்தி, மாணவருக்கு பட்டம் வழங்கப்படும். 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. இதனால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பட்டங்களை பெற முடியாமல் தவித்தனர். இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த, முதன்மை மற்றும் துணை பட்டமளிப்பு விழாக்களை இணைத்து, பெரிய விழாவாக நடத்த, பல்கலைக்கழகம் முடிவெடுத்தது.
சென்னை பல்கலையின், 155வது பட்டமளிப்பு விழா, பல்கலையின் நூற்றாண்டு விழா மண்டபத்தில், இன்று நடக்கிறது. இதில், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் என, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பட்டங்களை பெற உள்ளனர். கவர்னர் ரோசய்யா தலைமையில் நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா, சென்னை பல்கலையின், 150வது நினைவு வளைவையும் திறந்து வைக்கிறார். 84 லட்சம் ரூபாய் செலவில், மாமல்லபுரம் சிற்பம் மற்றும் கட்டடக் கல்லூரி மாணவர்களால், இந்த வளைவு உருவாக்கப்பட்டது.
