சென்னை பல்கலை கழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு பட்டமளிப்பு
சென்னை பல்கலை கழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு பட்டமளிப்பு
UPDATED : ஆக 18, 2013 12:00 AM
ADDED : ஆக 18, 2013 10:21 AM
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின், 155வது பட்டமளிப்பு விழா, கவர்னர் ரோசய்யா தலைமையில், பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், 2011, 2012ம் ஆண்டுக்கான துணை பட்டமளிப்பு விழாவில், 63 ஆயிரம் மாணவர்கள், பட்டங்களையும், 980 மாணவர்கள், பி.எச்டி., பட்டங்களையும், தொலைதூர கல்வியில் முடித்த, 30,997 பேர் பட்டங்களையும் பெற்றனர்.
அரசு கல்லூரி மாணவி மோகனவள்ளி, ஒன்பது பதக்கங்களையும், மாணவி சரோஜினி, மூன்று பதக்கங்களையும், வேதியியல் துறை மணவி சுகன்யா, இரண்டு பதக்கங்கள் என, 71 மாணவர்கள், பதக்கங்களை பெற்றனர். விழாவில், முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 86 லட்ச ரூபாயில் அமைக்கப்பட்ட, பல்கலை தோரண வாயிலை திறந்து வைத்தார். மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டத்தின், இரண்டு லட்சத்து, 50 ஆயிரமாவது மரக்கன்றையும் நட்டார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது: "இந்தியாவில் உள்ள மிக பழமையான பல்கலைகளில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். கல்வி பராம்பரியம் மிக்க பல்கலைக்கழகம் தொலைநோக்கு சிந்தனையாளர்களை உருவாக்கி உள்ளது. சர்.சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகரன் ஆகிய இரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளையும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகிய ஜனாதிபதிகளையும் உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு. உயர் கல்வியில் உலகின் கேந்திரமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்." இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன், முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தமிழ்தாய் சிலையையும், கவர்னர் ரோசய்யாவுக்கு நினைவு பரிசையும் வழங்கினார்.
தோரண வாயில் திறப்பு
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா, 86 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட, பல்கலை சேப்பாக்க வளாக தோரண வாயிலை திறந்து வைத்தார். தமிழர் கட்டட கலையும், கோத்தி கட்டட கலையும் இணைந்து இந்த தோரண வாயில், அரசினர் சிற்ப மற்றும் கட்டட கலை கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
