தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு கல்வியறிவு பெற்றவருக்கு ஒரு மாணவர் - புதிய திட்டம்!

ஒரு கல்வியறிவு பெற்றவருக்கு ஒரு மாணவர் - புதிய திட்டம்!

ஒரு கல்வியறிவு பெற்றவருக்கு ஒரு மாணவர் - புதிய திட்டம்!


UPDATED : நவ 29, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வியறிவை உயர்த்த இந்தியா முழுவதுமே சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிவோம். சில மாநிலங்கள் 100 சதவீத கல்வியறிவை அடைந்துவிட்டன. சில விரைவில் எட்டவுள்ளன. சில மாநிலங்கள் இம்முயற்சியில் கடுமையாக ஈடுபட்டுள்ளன.
அவற்றில் ஒன்று  உ.பி. அம்மாநிலத்தில் 300 பள்ளிகள் இத்திட்டத்தில் தீவிரமாக இணைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் செயலாற்றும் ஒவ்வொருவரும் குறைந்தது ஒருவருக்காவது கல்வியறிவைக் கற்றுத் தரவேண்டும் என்னும் அம்சத்துடன் இது செயல்படத் துவங்கியுள்ளது.
உ.பி., பரேலி மாவட்டத்திலுள்ள கல்வித் துறை அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ‘ஏக் சத்ரா; ஏக் நிரஷ்கார்‘ என பெயரிடப்பட்டுள்ள ஒவ்வொரு கல்வியறிவு பெற்றவருக்கும் ஒரு மாணவர் என்னும் திட்டம் இப்போது மக்களிடையே பிரசித்தி பெற்று வருகிறது. இம் மாவட்டத்தில் மட்டும் 300 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இதில் குதித்துள்ளன.
உ.பி.,யில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பாடத் திட்டத்திலேயே இத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளதுடன் திட்டத்தில் மாணவர்கள் ஈடுபாடு காட்ட உதவும் விதத்தில் அவர்களின் ஈடுபாட்டைப் பொறுத்து மதிப்பெண்களும் தரப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களிடையே இத்திட்டம் தொடர்பான ஊக்கம் ஏற்படுவதுடன் ஆரோக்கியமான போட்டியும் உருவாகும் என்று கல்வித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இம்முயற்சியானது பரீட்சார்த்த அடிப்படையிலேயே அறிமுகம் செய்யப்பட்ட போதும் அடுத்த கல்வியாண்டு முதல் முழுமையாக செயல்படத் துவங்கும் என தெரிகிறது. பரேலி மாவட்டத்திலுள்ள ஒரு லட்சம் மாணவர்களின் வாயிலாக அப்பகுதியில் வசிக்கும் 2 லட்சம் கல்வியறிவு அற்றவர்களை அதைப் பெற உதவும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு என்.ஜி.ஓக்கள், மாவட்ட கல்வியறிவுக் குழு ஆகியவற்றின் மூலமாக கள ஆய்வு அடிப்படையில் மதிப்பெண்கள் தரப்படும்.
இதன்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் 15 நாட்களுக்குள் குறைந்தது 2 முறையாவது ஒரு கல்வியற்றவருக்கு பாடம் சொல்லித் தர வேண்டும். புதுமையான இத்திட்டத்திற்கு உ.பி., மாநில அரசும் மத்திய அரசும் பாராட்டு தெரிவித்துள்ளன. கல்வியறிவைப் புகட்ட இதுவே மிகச் சிறந்த வழி என உ.பி., மாநில மனிதவள அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கல்வியறிவானது 65.4 சதவீதமாக உள்ள நிலையில் உ.பி.,யில் இது 57.36 ஆக உள்ளது. இந்தியாவின் கல்வியறிவு அற்ற மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீத மக்கள் உ.பி., பீகார், ம.பி., ராஜஸ்தான், ஆந்திரா, மே.வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us