குறுகிய சந்துக்குள் அங்கன்வாடி மையம்; ஆட்டு மந்தையாக குழந்தைகள் அடைப்பு
குறுகிய சந்துக்குள் அங்கன்வாடி மையம்; ஆட்டு மந்தையாக குழந்தைகள் அடைப்பு
UPDATED : ஆக 19, 2013 12:00 AM
ADDED : ஆக 19, 2013 12:10 PM
கரூர்: குறுகிய சந்துக்குள், சிறிய அறையில் அங்கன்வாடி மையம் செயல்படுவதால், ஆட்டு மந்தைபோல குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, எட்டு வட்டாரங்களில் என, மொத்தம் 1,096 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், இரண்டு முதல், ஐந்து வயது வரை உள்ள, 22 ஆயிரத்து 481 குழந்தைகளுக்கு முட்டை, மதிய உணவு வழங்கப்படுகிறது. தற்போது மதிய உணவில் குழந்தைகளுக்கு கலவை உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கரூர் வெங்கமேடு செங்குந்த நகரில், வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்குகிறது. அதிலும் குறுகிய சந்துக்குள் உள்ள "லைன்" வீட்டில் உள்ள சிறிய அறையில் மையம் செயல்படுவதால், குழந்தைகள் மூச்சு கூட விடமுடியாமல் திணறி வருகின்றனர். அந்த அறையில் ஆட்டு மந்தையை அடைப்பது போல், குழந்தைகளை அடைத்து வைத்து பாடம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: அங்கன்வாடி செங்குந்த நகர், காமாட்சி தெரு ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகள் வருகின்றனர். இம்மையத்தில் ஒரு பணியாளர், சமையலர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு மொத்தம், 25 குழந்தைகள் பயில்கின்றனர். பழைய "லைன்" வீட்டில், எட்டுக்கு எட்டு என்ற அளவில் உள்ள அறையில், தாழ்வான கட்டிடத்தில் மையம் செயல்படுகிறது.
ஓடுகள் வேயப்பட்ட மேற்கூரை, ஆங்காங்கே ஓட்டை விழுந்துள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் உள்ளே புகுந்து விடுவதால், குழந்தைகள் தண்ணீரில் நனைந்து கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மையத்துக்குள், குழந்தைகளுக்கு சமைத்து போட மளிகை பொருட்கள், சத்து மாவு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடத்தில் குழந்தைகளை அமரவைத்து பாடம் கற்று கொடுக்கப்படுகிறது. மேலும் இடநெருக்கடி காரணமாக, வரும் வழியில் அடுப்பு வைத்தும் சமைக்கப்படுகிறது. இதனால் இங்கு அமர்ந்துள்ள குழந்தைகள் கண் எரிச்சலில் அவதியுறுகின்றனர். ஆசிரியை நின்று பாடம் நடத்த வசதியாக இடமோ அல்லது கரும்பலகையோ ஏதும் வைக்கப்படவில்லை.
மேலும் மையத்துக்கு செல்லும் வழி, இரண்டு அடி மட்டுமே உள்ளதால், ஏதாவது விபத்து ஏற்பட்டால் தப்பி ஓட கூட இடம் கிடையாது. மையத்துக்கு வாடகையாக மாதம், 500 ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கண் எரிச்சல், படிக்க இடவசதி குறைவு, பாதுகாப்பின்மை என பல காரணங்களால், மையத்தில் கல்விகற்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு பெற்றோர் கூறினார்.
பீகார் மாநிலத்தில் சத்துணவு சாப்பிட்ட, 20 குழந்தை பலியான சம்பவத்தை யாரும் மாறந்திருக்க முடியாது. ஆனால், இதை பற்றி கவலைப்படாமல், குடோன் போல் உள்ள சிறிய இடத்தில் ஆட்டு மந்தைகளை போல, குழந்தைகளை அடைத்து பாடம் நடத்துவது கொடுமையாக உள்ளது. இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
