நல்ல மருத்துவர்களை உருவாக்குவதைவிட வேறேதும் முக்கியமில்லை: முதல்வர்
நல்ல மருத்துவர்களை உருவாக்குவதைவிட வேறேதும் முக்கியமில்லை: முதல்வர்
UPDATED : ஆக 20, 2013 12:00 AM
ADDED : ஆக 20, 2013 04:43 PM
சென்னை: தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலையின் 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில் பேசியதாவது;
இந்தியாவிலேயே, இரண்டாவது பெரிய மருத்துவப் பல்கலைக்கழகமாக திகழும் இப்பல்கலை, தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவ, பல் மருத்துவ, இந்திய மருத்துவ மற்றும் துணைநிலை மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்தி, நெறிமுறைப்படுத்துவதுடன், மருத்துவக் கல்வியின் மேம்பாட்டிற்கும் பாடுபட்டு வருகிறது.
மேலும், மருத்துவம் மற்றும் துணைநிலை மருத்துவத்தில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை மதிப்பிடுவதில், ஒரு வெளிப்படைத் தன்மையை இப்பல்கலை கொண்டுள்ளது என்பதை அறிவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முன்முயற்சிகள், தமிழக மருத்துவக் கல்வியில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
சமூக அர்ப்பணிப்பும், தங்கள் முன்னுள்ள சவால்களை சிறந்த சேவை நோக்குடன் சமாளிக்கும் மனப்பாங்கையும் பெற்ற மருத்துவ பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்தில் இப்பல்லை தொடர்ந்து செயலாற்ற வேண்டும். மேலும், மருத்துவ சேவைகளின் தேவைகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றி முழு விழிப்புணர்வோடு, திட்டமிட்டு வழங்கப்படுவதாக மருத்துவக் கல்வி அமைய வேண்டும்.
கற்றல் என்பது ஒரு தொடர்ந்த செயல்பாடு என்பதையும், தங்களின் அறிவானது, தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதையும், ஒவ்வொரு மருத்துவப் பட்டதாரியும் உணர வேண்டும்.
இப்பல்கலைக்கழகம், சமூகம், தொழில்துறை மற்றும் வணிக இணைப்பு வசதியைப் பெற்றிருப்பதோடு, பிற கல்வி நிறுவனங்களுடன், எக்ஸ்சேஞ்ச் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு திட்டங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
நல்ல தரமான மருத்துவத் திறன் மற்றும் சமூகத்தின் பால் அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட மருத்துவர்களை உருவாக்குவதை விட, இப்பல்கலைக்கென்று எந்த முக்கிய பணியும் இல்லை. மருத்துவக் கல்வியில் வணிக மயமாக்கலை தடுப்பதுடன், தரத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா, தமிழக சுகாதார அமைச்சர் வீரமணி, இதர தமிழக அமைச்சர்கள், பல்கலை துணைவேந்தர் சாந்தாராம், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
