UPDATED : ஆக 22, 2013 12:00 AM
ADDED : ஆக 22, 2013 07:35 AM
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த, மூன்று சிறுவர்களின் கலை படைப்புகள், குழந்தைகளுக்கான தேசிய விருதான, "பால்ஸ்ரீ"க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்க உள்ளார்.
கலை பண்பாட்டுத்துறை , தமிழ்நாடு சிறுவர் மன்றம் மூலம், புதுமைகளை படைத்திடும், சிறந்த குழந்தைகளை தேர்வு செய்து, மத்திய அரசால் வழங்கப்படும், "பால்ஸ்ரீ" விருது போட்டிக்கு, ஆண்டுதோறும் மாணவர்களை அனுப்பி வைக்கும். அகில இந்திய அளவில், மேடைக்கலை, படைப்புக்கலை, அறிவியல் கலை ஆகியவற்றில் புதுமைகள் செய்யும், ஒன்பது முதல், 16 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இவ்விருது வழங்கப்படும்.
ஆரம்பத்தில், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் குழந்தைகள், தென் மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். அதில், தேர்வு செய்யப்படும் குழந்தைகள், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். கடந்த, 2011ல், 21 ஜவகர் சிறுவர் மன்றங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில், வெற்றி பெற்ற, 62 சிறுவர்கள், தென் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 12 சிறுவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். அதற்கான போட்டி முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவி சிம்ரன் சிவகுமார், மேடைக் கலையிலும்; சென்னை மயிலாப்பூர், சர்.சிவசாமி கலாலயா பள்ளி மாணவி நந்தினி, படைப்புக் கலையிலும்; சேலம் குளுனி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, தபுனா, எழுத்துக் கலையிலும், தேசிய விருதான, "பால்ஸ்ரீ"க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டில்லி ஜனாதிபதி மாளிகையில், விரைவில் விருது வழங்குகிறார். 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிசான் விகாஸ் பத்திரம், நினைவுப் பரிசு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். தேசிய விருதுக்கு, தமிழக சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர்களை பாராட்டி, தமிழக அரசும், 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு வழங்குகிறது.
