டி.என்.பி., பயிற்சி மாணவர்களின் காலவரையற்ற போராட்டம் துவக்கம்
டி.என்.பி., பயிற்சி மாணவர்களின் காலவரையற்ற போராட்டம் துவக்கம்
UPDATED : ஆக 27, 2013 12:00 AM
ADDED : ஆக 27, 2013 11:37 AM
புதுச்சேரி: அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, அரசு பொது மருத்துவமனையின் டி.என்.பி., பயிற்சி மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நேற்று துவக்கினர்.
இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்தில் டி.என்.பி., மூன்றாமாண்டு டிப்ளமா படிப்பு உள்ளது. இங்கு 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள், அரசு பொது மருத்துவமனையிலும், ராஜிவ்காந்தி மகளிர் குழந்தைகள் மருத்துவமனையிலும் அரசு மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாத நேரத்தில் டி.என்.பி. மாணவர்கள் மருத்துவ சேவைக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். டி.என்.பி., மாணவர்கள் நேற்று பணியைப் புறக்கணித்து, காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் திரண்ட மாணவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். டி.என்.பி., பயிற்சி மாணவர்கள் கூறியதாவது:
அரசு பொது மருத்துவமனையில் டி.என்.பி., முதுநிலை படிப்பிற்கு கல்விக் கட்டணமாக 15 ஆயிரம், நூலகத்திற்கு 5000, மாதிரி தேர்வுக்கு 10 ஆயிரம், ஹாஸ்டலுக்கு 10 ஆயிரம், சிறைப்பு அழைப்பாளர் வகுப்பில் பங்கேற்க 10 ஆயிரம் என 50 ஆயிரம் கட்டணமாக பெறப்படுகிறது. ஆனால், நூலகத்தை தவிர மற்ற எந்த வசதிகளும் இங்கு இல்லை.
இல்லாத ஹாஸ்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மாதிரித் தேர்வு, சிறப்பு அழைப்பாளர் வகுப்பு இதுவரை நடத்தப்படவில்லை. பயிற்சி காலத்தில் அரசு மருத்துவர்களுக்கு இணையாக பணியாற்றும் எங்களுக்கு அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே வேளையில் குறைவான ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு 54 ஆயிரம் வரை, வழங்கப்படுகிறது. ஆனால் அரசு பொதுமருத்துவமனையில் முதலாமாண்டு 19 ஆயிரம் ரூபாய், இரண்டாமாண்டில் 21 ஆயிரம் ரூபாய், மூன்றாமாண்டில் 23 ஆயிரம் மட்டுமே வழங்கப்படு கிறது.
