பொறியியல் காலி இடங்கள் எவ்வளவு: அண்ணா பல்கலைக்கு நோட்டீஸ்
பொறியியல் காலி இடங்கள் எவ்வளவு: அண்ணா பல்கலைக்கு நோட்டீஸ்
UPDATED : ஆக 28, 2013 12:00 AM
ADDED : ஆக 28, 2013 07:55 AM
திருச்சி, நேருஜிநகர் பொதுநலச் சங்க செயலாளர் வெள்ளைச்சாமி தாக்கல் செய்த பொது நல மனு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் -அரசு ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலை சார்பில், ஆண்டுதோறும், கவுன்சிலிங் நடக்கிறது. இதற்காகும் செலவை பல்கலை ஏற்கிறது.
பொறியியல் படிப்பில், மதிப்பெண் அடிப்படையில், ஒற்றைச் சாளர முறையில், மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதாக கூறுகின்றனர். அதைவிட, சிறந்த கல்லூரிகளில், காலி இடம் இருந்தாலும், கிடைப்பதில்லை. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன் 16ம் தேதி முதல் 20 ம்தேதி வரை நடந்தது. பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன் 21 முதல், ஜூலை 30 வரை நடந்தது.
தற்போது, மருத்துவ படிப்பிற்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில், இடம் கிடைக்காதவர்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு மாணவர்கள் வெளியேறியதால், பொறியியல் கல்லூரிகளில், 1,170 காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன. இவை, அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள்.
அடுத்தகட்டமாக, தகுதியான மாணவர்கள் சேரவில்லை எனில், கவுன்சிலிங் நடத்துவதன் நோக்கம் நிறைவேறாது. சில கல்லூரிகளில், இந்த காலி இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடமாக கருதி, 20 முதல் 30 லட்ச ரூபாய்க்கு விற்கின்றனர். இதற்கு காரணம், கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள காலி இடங்கள், பிற படிப்புகளுக்கு சென்ற மாணவர்கள் பற்றிய விபரங்களை அண்ணா பல்கலை அறிவிக்காததே.
இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், காலி இடங்கள், அதில், தகுதியானவர்கள் சேரலாம் என, அறிவிப்பு வெளியிடக் கோரி, அண்ணா பல்கலைக்கு மனு அனுப்பினேன். மருத்துவப் படிப்பிற்கு, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்த பின், பொறியியல் கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டிற்குரியவை என, மாற்றி நிரப்ப தடை விதிக்க வேண்டும்.
ஒவ்வொரு பொறியியல் கல்லூரிகளிலும், மாணவர் சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள காலி இடங்களை வெளிப்படையாக அறிவித்து, தகுதியானவர்களை நிரப்ப உத்தரவிட வேண்டும், என, குறிப்பிட்டார்.
தற்காலிக தலைமை நீதிபதி, ஆர்.கே.அகர்வால், நீதிபதி, என்.பால்வசந்த குமார் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. உயர்கல்வித்துறை செயலாளர், அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, ஆக.,30 ம்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
