பெண் படித்தால் தலைமுறையே மாற்றம் பெறும்: ரமேஷ் பிரபா
பெண் படித்தால் தலைமுறையே மாற்றம் பெறும்: ரமேஷ் பிரபா
UPDATED : டிச 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “பெண்கள் படித்தால், அந்த தலைமுறையின் தலையெழுத்து மாறுவதுடன் அடுத்த தலைமுறையும் சிறப்பாக இருக்கும்,” என ரமேஷ் பிரபா தெரிவித்தார்.
தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் சின்னத்திரை புகழ் ரமேஷ் பிரபா பேசியதாவது:
ஞாயிற்றுக்கிழமையில் காலையில் சீக்கிரம் எழுந்து இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்ற அக்கறை எடுத்து, வந்ததில் முதல் வெற்றியை அடைந்துள்ளீர்கள். அரங்கின் வெளியில் அதிக பெற்றோர்கள் வந்துள்ளனர். காலையில் நீங்கள் சீக்கிரம் எழுந்து படிக்கும் போது, உங்களுக்கு முன் எழுந்து உங்களுக்காக காபி போட்டு தரும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் இம்முறை தினமலர் செய்துள்ள மாற்றம் மாணவியர்களுக்கு, மாணவர்களுக்கென தனித்தனியாக பிரித்து வைத்ததுதான். கடந்தாண்டுகளில் கிடைத்த அனுபவங்களின்படி மாணவியர்கள் தொடர்ந்து அதிகளவில் வருவது தான் இதற்கு காரணம். அவர்களுக்கு என்று தனியாக நடத்தப்படுகிறது.
காரணம் தொடர்ந்து தேர்ச்சியில் மாணவியர் அதிக சதவீதம் பெறுவது. இது மாணவியர்கள் சரியாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. பொதுவாக முதலில் பிளஸ் 2 தேர்வும் அடுத்ததாக பத்தாம் வகுப்பு தேர்வும் வரும். இதில் பத்தாம் வகுப்பு தேர்வினை ஆறு லட்சம் பேர் எழுதுவதாக தகவல்கள் வரும். ஆனால் பிளஸ் 2 வரும் போது, நான்கரை லட்சமாக குறைந்து விடும். இதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமை மற்றும் படிப்பை தொடர முடியாமை என்ற இரண்டு பிரச்னை இருக்கிறது.
கஷ்டமான பாடங்களை மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்துவிட்டு, சாதாரண பாடங்களில் சிலர் தோல்வியடைந்து விடுவர். எனவே, எதையும் எளிமை, கஷ்டம் என்று பிரித்து அலட்சியம் காட்டுதல் கூடாது. கஷ்டமான பாடம் என்று எதுவும் கிடையாது. இந்த வயதில் ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல்லும் எதையும் கேட்கக் கூடாது என்று நாம் முடிவு செய்து விடுகிறோம்.
அதே போன்று பாடத்திலும் முடிவு செய்து விடுகிறோம். அப்படியெல்லாம் கிடையாது; சில நேரங்களில் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் முறையிலேயே பாடங்கள் கஷ்டமாக தெரியும். அதிலிருந்து உங்களை வெளியில் கொண்டு வந்து ஒரு பாடத்தை இப்படி அணுகலாம். இவ்வளவு சுலபமாக மதிப்பெண் வாங்கலாம். ஏற்கனவே நன்றாக படித்திருந்தாலும் எப்படி படித்ததை வழங்குவது என்பதை சொல்லித் தருவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமாறி பெண்களைப் படிக்க வைக்க விரும்பி அந்த மகிழ்ச்சியில் பெற்றோர் வந்திருக்கின்றனர். காரணம் ஒரு ஆண் படிக்கும் போது அந்த குடும்பத்தின் தலையெழுத்து மாறி வளர்கிறது. ஆனால், பெண் படித்தால் அந்த தலைமுறையின் தலையெழுத்து மாறி அடுத்து வரும் தலைமுறையும் மாற்றம் பெறும் என்பது அடிப்படை உண்மை. இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.
