கல்வித்துறை அலுவலகங்களில் சடங்கு போல் நடக்கும் குறைதீர்ப்பு கூட்டம்
கல்வித்துறை அலுவலகங்களில் சடங்கு போல் நடக்கும் குறைதீர்ப்பு கூட்டம்
UPDATED : ஆக 31, 2013 12:00 AM
ADDED : ஆக 31, 2013 08:54 AM
சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் நடக்கும் ஆசிரியர் குறைதீர்ப்பு கூட்டம், உப்பு, சப்பில்லாமல், வெறும் சடங்கு போல் நடக்கிறது. இந்தக் கூட்டம், உருப்படியாக நடக்க, தொடக்கக் கல்வி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆசிரியர்கள், கீழ்மட்ட அளவில் தீர்க்க வேண்டிய சாதாரண பிரச்னைகளுக்கும், இயக்குனர் அலுவலகம் வரை வருகின்றனர். இதனால், ஆசிரியர்களின், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும், இரண்டாவது சனிக்கிழமையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்த இரு அலுவலகங்களிலும் தீர்க்க முடியாத பிரச்னைகளை 3வது சனிக்கிழமையில் இயக்குனர் அலுவலகத்தில் தீர்க்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. இந்த கூட்டங்கள் படிப்படியாக சடங்குக்கு நடப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில், ஆசிரியர்களிடம் விண்ணப்பங்களை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். பி.எப்., லோனுக்கு விண்ணப்பிப்பது பணிப் பதிவேட்டில், ஏதாவது பதிவுகள் விடுபட்டிருந்தால் அதை நிரப்புவது தொடர்பான கோரிக்கை, சம்பளக் குறைபாடு, ஆசிரியர்களின் இதர பிரச்னைகள் குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில், தீர்க்க முடியாத பிரச்னைகள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் தீர்க்கப்பட வேண்டும். இதிலும், முடியாத பிரச்னைகளை மட்டும், இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம், வரவேற்கத்தக்கது. ஆனால், மாவட்ட அளவிலும், இயக்குனரக அளவிலும் இந்த கூட்டங்கள் தற்போது நடப்பதில்லை.
இந்த கூட்டங்களை, முறையாக நடத்தவும் உரிய முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இதுபோன்ற கூட்டங்களை, பள்ளி கல்வித்துறையில் நடத்தவும் அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
