அறிவுத் தேடல் முதல் ஆன்மிகத் தேடல் வரை: புத்தகத் திருவிழாவில் சங்கமம்
அறிவுத் தேடல் முதல் ஆன்மிகத் தேடல் வரை: புத்தகத் திருவிழாவில் சங்கமம்
UPDATED : செப் 01, 2013 12:00 AM
ADDED : செப் 01, 2013 05:55 AM
மதுரை: மதுரை தமுக்கத்தில் நடக்கும் 8வது புத்தக திருவிழாவில், "அறிவுத் தேடல் முதல் ஆன்மிகத் தேடல் வரை" வாசகர்களின் சிந்தனைக்கு திகட்டாத தீனியாக, புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
அறிவுக்கு விருந்தாகும் புத்தகங்கள்... நம் மனதை செழுமைப்படுத்தும் அழையா விருந்தாளிகள். புத்தகத் திருவிழாவில் இடம் பெற்ற 220 ஸ்டால்களில் பல லட்சம் புத்தகங்கள் உள்ளன. குழந்தைகள் புத்தகங்களுக்கு என தனி ஸ்டால்கள் நிறைய உள்ளன.
கலரிங், ஓவியம், அறிவுக் கதைகள், நீதிக் கதைகள், புராண, இதிகாச கார்ட்டூன் ஓவியக் கதைகள், கணிதப் புதிர்கள், ஆங்கில இறக்குமதி புத்தகங்கள் குவிந்துள்ளன. கல்லூரிப் பருவத்தினருக்கு போட்டித் தேர்வுக்கான வழிகாட்டும் புத்தகங்கள், வெற்றியாளராக்கும் சிந்தனை புத்தகங்கள், கம்ப்யூட்டர், இணையதளம் சார்ந்த புத்தகங்கள் உள்ளன.
குடும்பத் தலைவிகளுக்கான சிறுகதை, புதினங்கள், சமையல், அழகுக்கலை, வீட்டுக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள், நன்னெறி புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆன்மிகத் தேடலை விரும்புவோருக்கு மனம் சார்ந்த, மனத்தை அமைதிபடுத்தும், வளப்படுத்தும் புத்தகங்கள், இறைவழிபாட்டை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள், ஆன்மிக நெறியாளர்களின் ஆழ்ந்த கருத்துத் தொகுப்புகள் குவிந்துள்ளன.
ஜோதிடம், வானசாஸ்திரம், வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்கள் உள்ளன. பாரம்பரிய எச்சத்தை நினைவுகூறும் இலக்கிய வரலாறு, தமிழ் அகராதி, புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பிறமொழி புத்தகங்களும் கிடைக்கின்றன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. புத்தகத் திருவிழாவிற்கான ஊடக உதவியை, தினமலர் நாளிதழ் வழங்குகிறது.
மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், வாசகர்கள் வாங்கி வரும் புத்தகங்களில், நட்சத்திர எழுத்தாளர்கள் தினமும் கையெழுத்திட்டு தர உள்ளனர். தினமும் மாலை 6.15 மணி முதல் 7 மணி வரை, தினமலர் ஸ்டாலில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இன்று கையெழுத்திடுபவர்: எழுத்தாளர், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
தினமலர் இலவச இணைய சேவை : தினமலர் இணையதள சேவையில் (www.dinamalar.com) நுழைந்து 14 ஆண்டுகளாகிறது. இதை 207 நாடுகளில் வாசகர்கள் பார்க்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் பார்க்கின்றனர். தமிழ் பத்திரிகைகளில் "தினமலர்&' இணையதளத்தை அதிக வாசகர்கள் பார்ப்பதால், முதலிடத்தில் உள்ளது. கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் பல்வேறு வகை மொபைல்போன்களில் "தினமலர்&' இணையதளத்தை பார்க்கும் வசதி உள்ளது.
மதுரை தமுக்கம் மைதானம் புத்தகத் திருவிழாவில் தினமலர் (54 ஏ) அரங்கு உள்ளது. இங்கு லேப்டாப், ஐ பேடு, ஆப்பிள்மேக், ஆன்ட்ராய்டு டேப், வின்டோஸ் டேப், ஐ போன், வின்டோஸ் மொபைல், ஆன்ட்ராய்டு மொபைல், பிளாக்பெரி (ஓ. எஸ்.,10) மொபைல் போன்களில் இலவசமாக தினமலர் இணையதளம் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து தரப்படுகிறது. தினமலர் இணையதள பதிவிறக்கம் மற்றும் அதை பார்ப்பதற்கு கட்டணம் இல்லை. அரங்கில் க்யூ.ஆர் கோடு (Q.R Code) உள்ளது. இதை ஸ்கேனர் வசதி உள்ள மொபைல்போன்கள் மூலம் தினமலர் இணையதளத்தை, நீங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தினமலர் மூலம் படைப்பாளி-வாசகர் சந்திப்பு : புத்தகத் திருவிழாவில் வாசகர்கள் வாங்கிய புத்தகங்களில், "காவல்கோட்டம்" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், தினமலர் அரங்கில் நேற்று, கையெழுத்திட்டார்.
அவர் கூறியதாவது: சமூகத்தில் எழுத்தாளர்களுடனான உறவு முக்கியமானது. கேரளாவில் முதன்முதலில் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது, விருப்பமான எழுத்தாளர் வீட்டிற்குச் சென்று, வாழ்த்துப் பெறுவர். புத்தகங்களை படைக்கும், படைப்பாளிகளை சந்திக்கும் வாய்ப்பு மதுரை வாசகர்களுக்கு இல்லை. எழுத்தாளர்கள்- வாசகர்கள் சந்திப்பை முதன்முதலில், தினமலர் ஏற்படுத்தி தந்துள்ளது. எனது நாவலை படித்த ஒரு வாசகர், 2 ஆண்டுகளாக என்னை சந்திக்க வேண்டும் என ஏங்கியதை, இன்று கையெழுத்திடும்போது உணர முடிந்தது. இத்திருவிழாவில் தினமும் ஒரு ஆளுமையை சந்திக்க முடியும், என்றார்.
