UPDATED : செப் 01, 2013 12:00 AM
ADDED : செப் 01, 2013 11:50 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு இந்துமேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர் டேனித் ஆதித்யா, பிளாஸ்டிக் பொருட்களால் நில வளம் மாசுபடுவதை தடுக்கும் விதமாக, வாழை இலையில் டீ கப், தட்டு, கவர் போன்றவைகளை தயாரித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். பெண்கள் இன்ஜினியரிங் கல்லூரி அறிவியல் கண்காட்சியில் காட்சி பொருளாக வைத்துள்ளார்.
வாழை இலை பறித்த இரண்டே நாளில் வாடிவிடும். ஆனால் இவர், இலையை பதப்படுத்தி, எப்போது வேண்டுமானலூம் பயன்படுத்துவதற்கு, பேப்பர் பிளேட், கப், பிளாஸ்டிக் கப் மாற்றாக, தயாரித்து உள்ளார்.
மாணவர் டெனித் ஆதித்யா, "டீக்கடை முதல் ஓட்டல்கள் வரை, உணவுகள் தரும் போது, பிளாஸ்டிக் பிளேட், பிளாஸ்டிக் டீ கப், அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. சில இடங்களில், பேப்பர் பிளேட், கப்களை பயன்படுத்துகின்றனர்.
பேப்பர்களுக்காக மரங்களும் வெட்டப்படுகிறது. இதனால் வன வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இவைகளிலிருந்து விடுபட வாழை இலையை கெடாமல் பல ஆண்டுகள் வைத்திருந்து பயன்படுத்தும் வகையில் டீ கப், பிளேட் தயாரிக்க முடிவு செய்தேன்.
வாழை இலையின் உட்சுவர் செல்களால் ஆனது. அவை மிகவும் லேசானதாக இருக்கும். நான் அவற்றை பதப்படுத்தி கடினத்தன்மையாக மாற்றம் செய்தேன். அதன் பின் அவற்றை பல ஆண்டுகள் பயன்படுத்தும் வகையில் பச்சை நிற இலையாகவும், டீ கப், பிளேட், போஸ்டல் கவராகவும் மாற்றினேன்.
பொதுவாக வாழை இலைகள் மூன்று நாட்களில் வாடி பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விடும். இந்த இலைகள் பல ஆண்டுகள் பயன்படும் விதத்தில் இருக்கும். சாதாரண இலைகள் 36 டிகிரி வெப்பத்தை மட்டுமே தாங்கும். இந்த இலைகள் 222 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும். சாதாரண இலைகள் மைனஸ் 12 டிகிரிக்கு மேல் குளிர்ச்சியை தாங்காது. இந்த இலைகள் மைனஸ் 30 டிகிரி குளரையும் தாங்கும். இதன் உற்பத்தி செலவும் மிகவும் குறைவு. இதை பயன்படுத்திய பின் ஆடு, மாடுகளுக்கு உணவாக கொடுக்கலாம். நான்கு வாரத்தில் மக்கி உரமாகிவிடும்.
இந்த இலை பொருள்களை பயன்படுத்துவதன் மூலம், உலகின் 59 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறையும். 18 சதவீத பேப்பர் பயன்பாடும் குறையும். இதை உபயோகித்த பின், கழிவுகளை மிருகங்கள் உணவாக உட்கொள்ளலாம், உரமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்,&'&' என்றார். மாணவர் டெனித் ஆதித்யா.
இவர் 2010ல் தொடர்ந்து இயக்ககூடிய "பவர் மைன்ட்" உள்ளிட்ட 6 சாப்ட்வேர்களை உருவாக்கி, மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றவர், என்பது குறிப்பிடத்தக்கது.
