சட்டக் கல்லூரி பெருமையை மீட்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!
சட்டக் கல்லூரி பெருமையை மீட்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!
UPDATED : டிச 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தடையை மீறும் மாணவர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கையை கல்லூரி முதல்வர் எடுக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டில் வக்கீல்கள் பாலு, சீனிவாசன் உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அடங்கிய ‘முதல் பெஞ்ச்,’ கல்லூரி மற்றும் விடுதி குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரல் மாசிலாமணிக்கு உத்தரவிட்டது.
அதன்படி, அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு பரிந்துரைகளைக் கூறியிருந்தார். இவ்வழக்கில் டிச. 1ம் தேதி ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு வருமாறு:
சட்டக் கல்லூரியின் பெருமையை மீட்க நீண்ட கால, குறுகிய கால அடிப்படையில் பரிந்துரைகளை செய்ய வேண்டியதுள்ளது.
நீண்ட கால அடிப்படையில் எடுக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
* பாரம்பரியமிக்க சட்டக் கல்லூரி கட்டடத்தைப் புதுப்பித்து, அதை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
* மாணவர்கள் சேர்க்கையை பொது நுழைவுத் தேர்வு மூலம் ஒழுங்குபடுத்த வேண்டும். தேவைப்பட்டால், சென்னை அருகில் மற்றொரு சட்டக் கல்லூரியை துவங்க வேண்டும்.
* நுõலக வசதியை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்களை முழுமையாக நியமிக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்.
* விடுதியில் அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும். முழு நேரமும் பணிபுரியும் வார்டனை நியமிக்க வேண்டும். அவ்வப்போது பெற்றோர் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
* சட்டக் கல்வி இயக்குனர் தலைமையில் குறை தீர்க்கும் குழுவை அமைத்து மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். வேறு இடத்தில் விடுதி வசதியை அளிக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் எடுக்கப்பட வேண்டிய அம்சங்கள்:
* நிர்வாகத்தில் காலியாக உள்ள இடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகுப்புகளும் தவறாமல் நடக்க வேண்டும்.
* ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
* கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கேன்டீனை மூட வேண்டும்.
* தேர்வுகளை, டிச. 10ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை நடத்த வேண்டும். அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளிநபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. ஜனவரி 19ம் தேதி முதல் கல்லூரியை திறக்க வேண்டும்.
* மாணவர் விடுதியை இப்போது திறக்கும் சூழ்நிலை இல்லை. விடுதி மாணவர்களுக்கு, வேறு ஏதேனும் விடுதியில் இடம் தர வேண்டும்; அல்லது இடைக்கால ஏற்பாடாக மாதம் 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.
*அரசியல் மற்றும் ஜாதி அடிப்படையிலான நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தனியான ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும். கல்லூரி துவங்குவதற்கு முன், பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
* மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் வகுப்புகளை தனியாக நடத்த வேண்டும். அடிக்கடி கல்லூரிக்கு வராத மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய கல்லூரி ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது.
* கல்லூரியின் தெற்குப் பகுதி வாயிலில் முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கல்லூரிக்கு எதிரில் உள்ள போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள வாயிலைத் தவிர மற்றவற்றை மூடிவிட வேண்டும். அடையாள அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* கல்லூரி வளாகத்தில் போஸ்டர்கள், பிரசுரங்கள் இருக்கக் கூடாது. அரசியல், ஜாதி ரீதியிலான நிகழ்ச்சிகள், பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதை மீறும் மாணவர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கையை கல்லூரி முதல்வர் எடுக்கலாம்.
* சட்டக் கல்லூரியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐகோர்ட் பாதுகாப்புக் குழு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஐகோர்ட் பதிவுத்துறை உத்தர
வுக்கு, சட்டக் கல்லூரி முதல்வர் கட்டுப்பட வேண்டும்.
* சீனியர் வக்கீல்கள், வக்கீல்கள் 28 பேரின் சேவையை தேவைப்படும்போது சட்டக் கல்வி இயக்குனர், கல்லூரி முதல்வர் பெற்றுக்கொள்ளலாம். கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து சட்டக் கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி முதல்வர் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
