செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன விருது: ஜனாதிபதி வழங்குகிறார்
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன விருது: ஜனாதிபதி வழங்குகிறார்
UPDATED : செப் 04, 2013 12:00 AM
ADDED : செப் 04, 2013 10:12 AM
சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும், ஜனாதிபதியின் செம்மொழி விருதான தொல்காப்பியர் விருது, தமிழ் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல் ஆகியோருக்கு அறிவிக்கப்
பட்டுள்ளது.
இதுகுறித்து, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளோருக்கு, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், 2009 - 10 மற்றும் 2010 - 11ம் ஆண்டுகளுக்கான விருதுகளை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், 2009 - 10ம் ஆண்டுக்கான "தொல்காப்பியர்" விருது, முனைவர் ஐராவதம் மகாதேவனுக்கும், அயல்நாட்டு அறிஞருக்கு அளிக்கப்படும், "குறள் பீட" விருது, செக் குடியரசைச் சேர்ந்த, முனைவர், ஐரோஸ்லாவ் வசேக்கிற்கும், "இளம் அறிஞர்" விருதுகள், மதுரை டி.சுரேஷ், சிதம்பரம் - அண்ணாமலை நகர் எஸ்.கல்பனா, நாமக்கல் ஆர்.சந்திரசேகரன், சென்னை வாணி அறிவாளன், சிவகாசி சி.முத்தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.
இதேபோல், 2010 - 11ம் ஆண்டுக்கான, "தொல்காப்பியர்" விருது, பேராசிரியர் தமிழண்ணல் பெரிய கருப்பனுக்கும், "குறள் பீட" விருது, இங்கிலாந்தை சேர்ந்த ஒ ஜான் ரால்ஸ்டன் மாருக்கும், "இளம் அறிஞர்" விருதுகள், மதுரை டி.சங்கையா, ஆத்தூர் ஏ.ஜெயகுமார், புதுச்சேரி ஏ.மணி, காரைக்குடி சி.சிதம்பரம், மதுரை கே.சுந்தரபாண்டியன் ஆகியோருக்கும்
அளிக்கப்படுகின்றன.
"தொல்காப்பியர்" மற்றும் "குறள் பீட" விருதுகள் பெறுவோருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், சான்றிதழும், பொன்னாடையும் வழங்கப்படும். "இளம் அறிஞர்" விருது பெறுவோருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், சான்றிதழும் அளிக்கப்படுகின்றன. விரைவில் நடக்க உள்ள விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்க உள்ளார்.
