மதுரை புத்தகத் திருவிழாவில் அலை மோதும் மாணவர்கள் கூட்டம்
மதுரை புத்தகத் திருவிழாவில் அலை மோதும் மாணவர்கள் கூட்டம்
UPDATED : செப் 05, 2013 12:00 AM
ADDED : செப் 05, 2013 08:13 AM
பெற்றோர்களே...குழந்தைகளையும் அழைத்துச் சென்று படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். பத்து சதவீத தள்ளுபடி உண்டு. செப்., 9 வரை, தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஊடக உதவியை, "தினமலர்" நாளிதழ் வழங்குகிறது.
கடந்த பல ஆண்டுகளின் புத்தகத் திருவிழாவை விட, இந்தாண்டு மக்கள் அதிக அளவில் வந்து புத்தகங்களை வாங்குகின்றனர். இது குறித்து சிலரது கருத்துக்கள்... :
சண்முகம், "பபாசி" தலைவர்: கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஐந்து நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மூன்று லட்சம் பேர் வருவார்கள் என்று நம்புகிறோம். அனைத்து ஸ்டால்களிலும் புத்தகங்களை வாங்குவோரின் கூட்டம் அதிகமாக உள்ளது.
நாங்கள் எதிர்பார்த்ததை விட, புத்தகத் தேடல் குறித்த விழிப்புணர்வு உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மொத்தமாக கூடுகின்றனர். அதிகம் பேர் விரும்புவது திருக்குறள் புத்தகங்களைத் தான். ஆங்கிலவழி மாணவர்கள், குட்டி கதைகள் புத்தகங்களை வாங்குகின்றனர்.
வெங்கடாச்சலம், கிரஹிஷ் புக் வேர்ல்டு ஸ்டால்: போட்டித் தேர்வு புத்தகங்களுக்காகவே பிரத்யேக ஸ்டால் அமைத்துள்ளோம். வங்கித் தேர்வு, டி.என்.பி. எஸ்.சி., டி.இ.டி., காவலர், எஸ்.ஐ., தேர்வு, "கேட்" நுழைவுத் தேர்வு புத்தகங்கள் உள்ளன. எல்லோருக்கும் பொதுவானதாக, பொது அறிவு புத்தகங்களையும் வாங்குகின்றனர். ஸ்டாலில் வங்கித் தேர்வு புத்தகம் அதிகமாக விற்பனையாகிறது.
அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் இங்கிருப்பதால், மாணவர்கள் தங்கள் விருப்பம் போல, புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். நான்கு ஆண்டுகளாக, ஸ்டால் வைக்கிறோம். எனினும் இந்த ஆண்டு, தினமலர் நாளிதழில் தொடர்ச்சியாக செய்தி, விளம்பரம் வந்ததின் எதிரொலியாக, நிறைய இளைஞர்கள் வந்து வாங்குகின்றனர்.
கிருஷ்ணமூர்த்தி, சயின்ஸ் பார்க் புத்தக ஸ்டால்: அறிவியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே வைத்துள்ளோம். எங்களது "சயின்ஸ் பார்க்" மாத இதழ் சார்பில், புத்தகங்கள் விற்பனை செய்கிறோம். இப்போதுள்ள மாணவர்கள் அறிவியலுக்கு நிறைய முக்கியத்துவம் தருகின்றனர். இந்திய ஆராய்ச்சி, வானவியல் குறித்த தகவல்களை ஆர்வமாக கேட்கின்றனர். தமிழ்வழி மாணவர்களுக்காக, வெளியிட்ட அறிவியல் உலகம் என்ற புத்தகமும் அதிகமாக விற்பனையாகிறது.
ஆனந்த், டவ் மல்டிமீடியா ஸ்டால்: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சமச்சீர் புத்தகங்கள், மழலையர்களுக்கான பாடல்கள் "டிவிடி" க்கள் இங்குள்ளன. மாணவர்களுக்கு நேரடியாக பயிற்றுவிக்கும் வகையில் உள்ள கணித "டிவிடி", முப்பரிமாணத்தில் விளக்கப்படும் அறிவியல் "டிவிடி"க்கள் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. நீதிக்கதைகள், திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் விளக்க உரைகள் பிரத்யேகமாக இங்கு இருப்பதால், மாணவர்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.
புருஷோத்தமன், சர்வோதய இலக்கியப் பண்ணை ஸ்டால்: பெண்கள் கதைப்புத்தகங்கள், சமையல் கலை, குழந்தை வளர்ப்பு புத்தகங்களை விரும்பி வாங்குகின்றனர். ஆண்கள் பழங்கால வரலாறு, சாண்டில்யன், கல்கியின் புத்தகங்களை வாங்குகின்றனர். மாணவர்கள் சுயமுன்னேற்ற புத்தகங்களை தேடுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக காலை 11 முதல் மதியம் 2 மணி வரை, ஸ்டால்களில் விற்பனை செய்கிறோம்.
தீபிகா, தனியார் நிறுவனம்: என் பாட்டி சாந்தா, வரலாற்று புத்தகங்களை விரும்பி படிப்பார். எனக்கும் பழகி விட்டது. கல்கியின் ரசிகை நான். பொன்னியின் செல்வனை மட்டும் 15 முறை படித்திருப்பேன். இப்போதும் வரலாற்று நாவல்களை தேடி வந்துள்ளேன்.
பாப்பா மரியம், மதுரை குகன் மெட்ரிக் பள்ளி மாணவி: பொதுஅறிவு புத்தகங்களை தேடி வந்தேன். பா.விஜய் எழுதிய நண்பர்கள் குறித்த கவிதை புத்தகங்களை வாங்கினேன். அனைத்து ஸ்டால்களையும் ஒருமுறை பார்த்து விட்டு, இன்னும் நிறைய புத்தகங்களை வாங்குவேன்.
தினமலர் ஸ்டாலில் எழுத்தாளர் கையெழுத்து: மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், வாசகர்கள் வாங்கி வரும் புத்தகங்களில், நட்சத்திர எழுத்தாளர்கள் தினமும் கையெழுத்திட்டு தர உள்ளனர். தினமும் மாலை 6.15 மணி முதல் 7 மணி வரை, தினமலர் ஸ்டாலில், இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று கையெழுத்திடுபவர்: எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன்
