மருத்துவ ஆசிரியர்களாக எம்.எஸ்சி., பட்டதாரிகளா? டாக்டர் சங்கம் எதிர்ப்பு
மருத்துவ ஆசிரியர்களாக எம்.எஸ்சி., பட்டதாரிகளா? டாக்டர் சங்கம் எதிர்ப்பு
UPDATED : டிச 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘மருத்துவக் கல்லூரிகளில், டாக்டருக்கான பணியிடங்களில், எம்.எஸ்சி., படித்தவர்களை நியமிப்பதற்கான அரசு உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டிச. 8ம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டாக்டர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்படுள்ளதாவது:
மருத்துவக் கல்லூரிகளில், இந்திய மருத்துவ குழுவின் விதிகளின்படி பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பேராசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க எம்.எஸ்சி., படித்தவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்தனர். இந்நியமனம் கூடாது என டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
கடந்த ஆண்டு, எம்.எஸ்சி., படித்த 25 பேரை பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் குறிப்பிட்ட பிரிவுகளில், டாக்டர்களுக்கான பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இதற்கும் டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. எம்.எஸ்சி., படித்தவர்களை பணி நியமனம் செய்ய மாட்டோம் என்று அரசு உறுதி அளித்தது.
இந்நிலையில், கடந்த மாதம் எம்.எஸ்சி., மைக்ரோ பையாலஜி படித்த பட்டதாரிகள் 20 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவர்களுக்கான பணியிடங்களிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை தொடரக் கூடாது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்க உள்ள எம்.எஸ்சி., படிப்புகளுக்கு எம்.பி.பி.எஸ்., படித்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளில் டாக்டர் பணியிடங்களில் எம்.எஸ்சி., படித்தவர்களை நியமிப்பதற்கான அரசு உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, டிச. 8ம் தேதியிலிருந்து காலவரையற்ற வகுப்புகள் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்.
மாநிலம் முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., டி.எம்., எம்.டெக்., மற்றும் இதர மருத்துவக் கல்வி சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். தேர்வுப் பணிகள் மற்றும் இந்திய மருத்துவக்குழு ஆய்வுகள் புறக்கணிக்கப்படும். நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான வேலைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
டாக்டர் சங்கத்தின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
