ஊட்டி மலை ரயில் பயணம் பிரமிப்பாக இருந்தது: பழங்குடியின மாணவர்கள்
ஊட்டி மலை ரயில் பயணம் பிரமிப்பாக இருந்தது: பழங்குடியின மாணவர்கள்
UPDATED : செப் 07, 2013 12:00 AM
ADDED : செப் 07, 2013 11:01 AM
ஊட்டி: சினிமாவில் மட்டுமே ரயிலை பார்த்து வியந்த, ஈரோடுமாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவியர் முதன் முறையாக ஊட்டி மலை ரயிலில் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் ஆசனூர், சோலகர்தொட்டி, திம்பம், கேர்மாலம் பகுதிகளில், ஊராளி சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். சந்தன மரம் உட்பட பல்வேறு அரிய மரங்களை கொண்ட, வீரப்பன் வாழ்ந்த காட்டுப் பகுதியில், அதிரடி படையினர் கண்காணிப்பில் இருந்த கிராமங்கள் தான் இவை.
"சுடர்" தொண்டு நிறுவனம் மற்றும் ஈரோடு வடக்கு ரோட்டரி கிளப் சார்பில், "கல்வி சுற்றுலா" என்ற அடிப்படையில், ஊட்டி மலை ரயிலில் அழைத்து வரப்பட்டனர். உடன் வந்த பள்ளி ஆசிரியர் ராஜா கூறுகையில், "கல்வியறிவு குறைவாக உள்ள, அது குறித்த விழிப்புணர்வு இல்லாத பழங்குடியின மக்கள், தங்கள் குழந்தைகளை, தோட்ட வேலையில் ஈடுபடுத்தி வந்தனர்.
அவர்களை தேடிச்சென்று, உண்டு, உறைவிட பள்ளியில் சேர்த்து, படிக்க வைக்க, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியுலகம் தெரியாமல், சினிமாவில் மட்டுமே ரயிலை பார்த்து வந்த அவர்களுக்கு முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட, இந்த மலை ரயில் பயணம், அவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.
"சுடர்" தொண்டு நிறுவன நடராஜ் கூறுகையில், "பழங்குடியின மாணவர்களை, ரோட்டரி கிளப் உதவியுடன், அழைத்து வந்துள்ளோம்; ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம், ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட பிற சுற்றுலா ஸ்தலங்களுக்கு அழைத்து சென்று, நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாசாரம், மாவட்டத்தின் இயற்கை தன்மை குறித்து விளக்க உள்ளோம்; இது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் என நம்புகிறோம்," என்றார்.
ரயில் பயண அனுபவம் குறித்து பழங்குடியின மாணவர்கள் சிலர் கூறுகையில், "நாங்கள் இதுவரை ரயில் பயணம் செய்தது இல்லை; வெளியூர் எங்கேயும் போனது இல்லை. முதன் முறையாக, வெளி உலகுக்கு வந்து மேற்கொண்ட, ஊட்டி மலை ரயில் பயணம், பிரமிப்பாக இருந்தது. வெளியுலகத்தை புரிஞ்சுக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சது" என, விழிகள் விரிய கூறினர்.
