பெரியார் பல்கலையில் மோசடி: இயற்பியல் துறை பேராசிரியர் இடைநீக்கம்
பெரியார் பல்கலையில் மோசடி: இயற்பியல் துறை பேராசிரியர் இடைநீக்கம்
UPDATED : செப் 08, 2013 12:00 AM
ADDED : செப் 08, 2013 08:59 AM
சேலம்: சேலம் பெரியார் பல்கலையின் இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் கிருஷ்ணகுமார், ஃபர்னிச்சர் முறைகேடு மற்றும் போலி பில் மோசடி தொடர்பாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத்தலைவராக பேராசிரியர் கிருஷ்ணகுமார் பணி புரிந்தார். 2010ம் ஆண்டு, துணைவேந்தராக இருந்த தங்கராசு பணிக்காலம் முடிந்த பின், இவர், துணைவேந்தராக பொறுப்பு வகித்தார். அப்போது, பெரியார் பல்கலை விருந்தினர் மாளிகையை புதுப்பிக்க, 40 லட்ச ரூபாய் மதிப்பில், ஏ.ஸி., உள்ளிட்ட ஃபர்னிச்சர்கள் வாங்கப்பட்டது.
அவற்றை, அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் கொள்முதல் செய்யாமல், இரு மடங்கு விலை கொடுத்து வாங்கியதும், அதில், பல லட்ச ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் கிருஷ்ணகுமார், ஸ்டேஷனரி வாங்கியதற்காக சமர்பித்த பில்களும், போலியானது எனத் தெரிந்தது.
துணைவேந்தர் முத்து செழியன் நடத்திய விசாரணையில், பேராசிரியர் கிருஷ்ணகுமார், போலி பில்கள் தயாரித்து, பல லட்ச ரூபாய் வரை பல்கலை நிதியில் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இந்த போலி பில்களை, விஜிலென்ஸ் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணøக்காக, இயற்பியல் துறைத்தலைவர் கிருஷ்ணகுமாரை சஸ்பெண்ட் செய்து, நேற்று முன்தினம், துணைவேந்தர் முத்துச்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
இயற்பியல் துறைத்தலைவர் பொறுப்பு, பேராசிரியர் குமாரதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட இயற்பியல் துறைத்தலைவர் கிருஷ்ணகுமார், பெரியார் பல்கலையின் ஆசிரியர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
