UPDATED : செப் 08, 2013 12:00 AM
ADDED : செப் 08, 2013 09:02 AM
மதுரை: மதுரை தமுக்கத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் நடந்து வரும், 8வது புத்தகத் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. ஆக., 30ல் துவங்கிய இக்கண்காட்சியில், தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை வாசகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பேசினர். இறுதி நாளான நாளை, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, மதுரை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் பரிசு வழங்குகிறார்.
புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. நூற்றுக்கணக்கான புத்தக நிறுவனங்கள் ஒரே இடத்தில் ஸ்டால் வைத்துள்ள இதுபோன்ற இனிய வாய்ப்புக்கு, இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். எனவே, அறிவைத் தேடும் ஆர்வலர்கள் இன்றைய வாய்ப்பை நழுவவிடாமல் புத்தகத் திருவிழாவில் பொக்கிஷங்களை தேடலாம். உங்கள் குழந்தைகளையும் அழைத்து சென்று படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். ஊடக உதவியை தினமலர் நாளிதழ் செய்துள்ளது.
தினமலர் ஸ்டாலில் எழுத்தாளர் கையெழுத்து : மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், வாசகர்கள் வாங்கி வரும் புத்தகங்களில், நட்சத்திர எழுத்தாளர்கள் தினமும் கையெழுத்திட்டு தர உள்ளனர். தினமும் மாலை 6.15 மணி முதல் 7 மணி வரை, தினமலர் ஸ்டாலில், இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இன்று கையெழுத்திடுபவர்: எழுத்தாளர், பேச்சாளர் இளசை சுந்தரம்
