சான்றிதழ்களில் பாடப்பிரிவின் பெயர் மாற்றம்: பாரதியார் பல்கலை முற்றுகை
சான்றிதழ்களில் பாடப்பிரிவின் பெயர் மாற்றம்: பாரதியார் பல்கலை முற்றுகை
UPDATED : செப் 11, 2013 12:00 AM
ADDED : செப் 11, 2013 08:48 AM
கோவை: சான்றிதழ்களில் பாடப்பிரிவின் பெயர் மாற்றி வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், நேற்று பல்கலையை முற்றுகையிட்டனர்.
பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் 107 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், நடப்பாண்டு பி.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்ற சில மாணவர்களின் சான்றிதழ்களில், பி.ஏ., மொழி மற்றும் இலக்கியம் என்ற பெயரில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இத்தகைய சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள், நடப்பாண்டு பி.எட்., சேர்க்கைக்கான கலந்தாய்வில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று பல்கலையை முற்றுகையிட்டனர்; பல்கலை தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பாதிப்புக்குள்ளான மாணவர்கள் கூறுகையில், "மாற்றுச்சான்றிதழில் "பி.ஏ., ஆங்கில இலக்கியம்" என சரியாகவும், மற்ற சான்றிதழ்களில் "பி.ஏ., மொழி மற்றும் இலக்கியம்" என தவறாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட்., படிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. நாங்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலை தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதால் போராட்டத்தை கைவிட்டுள்ளோம்" என்றனர்.
பாரதியார் பல்கலை பதிவாளர் மனோகரன் கூறுகையில், "சென்னையிலுள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு இணைச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை, இப்பிரச்னை குறித்து சென்னையில் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பார்" என்றார்.
