UPDATED : செப் 13, 2013 12:00 AM
ADDED : செப் 13, 2013 08:52 AM
காரைக்குடி: அழகப்பா பல்கலையின் அடுத்த துணை வேந்தர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் சேது சுடலை முத்து, பதவிக்காலம் வரும் 26 ல் முடிகிறது. பல்கலை சட்ட விதியின்படி, துணை வேந்தரை நியமிக்க, 5 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்க வேண்டும். பல்கலை சிண்டிகேட் பரிந்துரைக்கும் இருவர், பல்கலை செனட் பரிந்துரைக்கும் ஒருவர், அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர், கவர்னர் நியமிக்கும் ஒருவர் என, ஐவர் அடங்கிய குழு, பல்கலை., துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான, நடைமுறைகளை மேற்கொண்டு, சிறந்த கல்வியாளர்கள் மூவரை தேர்வு செய்து, பல்கலை வேந்தரான, கவர்னருக்கு அனுப்பி வைக்கும்.
அந்த பட்டியலில் உள்ள 3 பேரில், ஒருவர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுவார். சிண்டிகேட் சார்பு பிரதிநிதிகளாக, மதுரை தியாகராஜா கல்வி குழும தலைவர் கருமுத்து கண்ணன், மதுரை காமராஜ் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் ஆளுடைய பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செனட் சார்பில், தமிழக முன்னாள் தேர்தல் கமிஷனர், காந்தி கிராம பல்கலை, முன்னாள் துணை வேந்தர் டி.கே.ஓசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசு சார்பு பிரதிநிதி மற்றும், கவர்னரின் பிரதிநிதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பல்கலை வேந்தர் என்ற முறையில், அவரின் பிரதிநிதியே, துணைவேந்தர் தேடல் குழுவுக்கு தலைவராக இருப்பார்.
புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு, அவர் பதவியேற்கும் வரை, துணைவேந்தரின் பணிகளை கவனிப்பதற்காக, "துணைவேந்தர் பொறுப்புக் குழுவை", அமைப்பதற்கான சிண்டிகேட் கூட்டம், நாளை அழகப்பா பல்கலையில் நடக்கிறது.
தமிழக அரசின் உயர்கல்வி துறை செயலர் அபூர்வ வர்மா பங்கேற்கிறார். சிண்டிகேட் கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட "பொறுப்பு குழு&', துணைவேந்தரின் அன்றாட பணிகள்,கொள்கை முடிவுகளை கவனிக்கும்.
