மதிப்பெண் பட்டியல் தராமல் இழுத்தடிக்கும் கோவை அண்ணா பல்கலை
மதிப்பெண் பட்டியல் தராமல் இழுத்தடிக்கும் கோவை அண்ணா பல்கலை
UPDATED : டிச 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இக்காலதாமதத்துக்கு அரசே காரணம் என பல்கலை நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் செயல்பட்ட அண்ணா பல்கலை, நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு கடந்த 2006ம் ஆண்டின் இறுதியில் கோவை, திருச்சி, நெல்லையில் துவக்கப்பட்டது. கோவை அண்ணா பல்கலைக்கென, இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. தற்காலிகமாக கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.,) செயல்பட்டது.
கோவை அண்ணா பல்கலை, எவ்வித வகுப்பறைகள் எதுவும் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு இன்ஜி., பாடப்பிரிவுகளைத் துவக்கியது. இப்பல்கலை மாணவ, மாணவியர், உறுப்பு கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து படித்தனர். வகுப்பறையில் இடநெருக்கடி ஏற்பட்டதால், மாணவர்களால் அவதிக்குள்ளாயினர்.
பல்கலை மற்றும் அங்கீகாரம் பெற்ற உறுப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு, கோவை அண்ணா பல்கலை வழங்கிய பாடத்திட்டத்தின்படி முதல் பருவத்தேர்வு கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட சில நாட்களில் மதிப்பெண் பட்டியல் கிடைத்து விடும் என மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இரண்டாவது பருவத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் பல்கலை மற்றும் உறுப்பு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்த முறையும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை.
கடந்த மாதம் மூன்றாவது பருவத்தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது மதிப்பெண் பட்டியல் கிடைக்குமா என்பதே மாணவர்களின் ஆதங்கம். இரண்டு செமஸ்டர்களுக்கான மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் அவதியுறும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், பல்கலை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். மதிப்பெண் பட்டியல் வழங்காமல் இழுத்தடிப்பதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கோவை அண்ணா பல்கலை துணைவேந்தரின் நேர்முக செயலாளர் சந்திரசேகரன் கடந்த செப்., 22ல் பதில் கடிதம் அனுப்பினார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்கலை வழங்கும் மதிப்பெண் பட்டியலில், அடையாளச் சின்னம் (லோகோ), கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். கோவை அண்ணா பல்கலைக்கான ‘லோகோ’வை, அரசு அங்கீகரிக்க இரண்டு செமஸ்டர் வரை காலதாமதம் ஆகிவிட்டது. இந்த தாமதத்தை நாங்களும் உணர்ந்துள்ளோம்.
தற்போது பல்கலை ‘லோகா’வை, அரசு அங்கீகரித்துள்ளது. பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செப்., இறுதிக்குள், பல்கலையின் அனைத்து உறுப்பு கல்லூரிகளையும் மதிப்பெண் பட்டியல் சென்றடையும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
கோவை அண்ணா பல்கலை நிர்வாகம், செப்., இறுதிக்குள் மதிப்பெண் பட்டியலை அனுப்பிவிடுவோம் என்று சொல்லியிருந்தாலும், இதுவரை எந்தவொரு உறுப்பு கல்லூரியையும் சென்று சேரவில்லை. இந்த காலதாமதம் பற்றி சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகள் கேள்வி எழுப்பினால், பல்கலை நிர்வாகத்திடம் இருந்து பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும் என்பதால், எந்தவொரு கேள்வியும் எழுப்பப்படுவதில்லை.
பல்கலை நிர்வாகத்தை சில மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘படிப்பை முடிக்க இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கிறது. அதற்குள் மதிப்பெண் பட்டியல் கிடைத்துவிடும். தேவையில்லாமல் இந்த பிரச்னையை கிளப்பாதீர்கள்’ என எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கோவை அண்ணா பல்கலை பதிவாளர் பழனிச்சாமியிடம் கேட்டபோது, “பல்கலைக்கான லோகோவை சமீபத்தில் அரசு அங்கீகரித்தது. இன்னும் 10 நாட்களுக்குள் அனைத்து உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த இரு செமஸ்டர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்கி விடுவோம்,” என்றார்.
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் கூறுகையில், “பல்கலையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. லோகோ வரவில்லை என்பதைக் காரணம் காட்டி, இரு செமஸ்டர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்காமல் இழுத்தடித்தது சரியான காரணம் இல்லை. பல்கலை நிர்வாகம், இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்,” என்றார்.
கோவை அண்ணா பல்கலை மாணவர் நலனில் அக்கறை கொண்டிருக்கிறது என துணைவேந்தர் அடிக்கடி கூறி வருகிறார். அப்படியெனில், மாணவர்களிடம் எப்போதோ மதிப்பெண் பட்டியல் போய்ச்சேர்ந்திருக்க வேண்டும். இந்த கால தாமதத்துக்கு அரசை மட்டும் குறை கூறுவது சரியல்ல; பல்கலை நிர்வாகத்தின் மந்தமான செயல்பாடே முழு காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
