மாணவி பலியான சம்பவம்: பள்ளி முதல்வருக்கு போலீஸ் காவல்
மாணவி பலியான சம்பவம்: பள்ளி முதல்வருக்கு போலீஸ் காவல்
UPDATED : செப் 14, 2013 12:00 AM
ADDED : செப் 14, 2013 07:59 AM
கோல்கட்டா: கோல்கட்டாவில், ராகிங் கொடுமைக்கு, 5ம் வகுப்பு மாணவி பலியான சம்பவத்தையடுத்து, பள்ளி முதல்வர், கைது செய்யப்பட்டு 3 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு கோல்கட்டா பகுதியில், தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும், 5ம் வகுப்பு மாணவி, சீனியர் மாணவியரால், ராகிங் கொடுமைக்கு உள்ளானார். கழிப்பறையில் இருந்த மாணவியை, சீனியர் மாணவியர் வெளிப்பக்கம் பூட்டிச் சென்றதால், மூச்சு திணறி உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.
இதையடுத்து, அந்த பள்ளியில் படிக்கும் மாணவியரின் பெற்றோர், பள்ளிக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தினர். பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, போராட்டம் நடத்தினர். உடன், பள்ளி முதல்வர் ஹெலன் சர்கார், ராஜினாமா செய்தார்.
இதன் பிறகும் அமைதியாகாத பெற்றோர், பள்ளி முதல்வரை கைது செய்ய வேண்டும் என, பிடிவாதம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளி முதல்வர் ஹெலன் சர்காரை, போலீசார் கைது செய்து, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி, மூன்று நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டரின் அஜாக்கிரதையால் உயிர் இழந்ததாக புகார் செய்தனர். இதை பிரதான வழக்குடன் இணைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பள்ளி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆசிரியர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், பெற்றோர் சிலர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
