‘அறிவியல் கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்கு உதவ வேண்டும்’
‘அறிவியல் கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்கு உதவ வேண்டும்’
UPDATED : டிச 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சமுதாய வளர்ச்சிக்கு உதவும் வகையில், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என்று, பள்ளி அறிவியல் கண்காட்சியில், கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
‘சந்திரயான்’ வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் மெட்ரிக்குலேசன் பள்ளியில், 7வயதிற்குட்பட்ட 712 மாணவ, மாணவியர் உருவாக்கிய அறவியல் கண்காட்சி நடந்தது.
இதில், 70 வகையான அறிவியல் திறன்களை வெளிப்படுத்தும் படைப்புகள் இடம் பெற்றன. முன்னதாக, அனைவரையும் பள்ளி முதல்வர் புருசோத்தமன் வரவேற்றார். விழாவில், பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிச்சாமி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
அறிவியலை எளிதாக புரிந்து கொண்டு மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்விகளின் அடிப்படையில் தான் ஆராய்ச்சி உருவாகிறது. அதன்படி அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள், சமுதாய வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தற்போதைய குழந்தைகள், நுண்ணறிவு மிக்கவர்கள்.
அதனால் மாணவ, மாணவிகளின் திறன்களை கண்டறிந்து, வெளிக்கொண்டு வரவேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு. அதனால் தான், தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் ‘படைப்பாற்றல்’ கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். விழா முடிவில், ஆசிரியை இந்துமதி நன்றி கூறினார்.
