சங்ககால துறைமுகங்கள் குறித்து தஞ்சை தமிழ் பல்கலை ஆய்வு
சங்ககால துறைமுகங்கள் குறித்து தஞ்சை தமிழ் பல்கலை ஆய்வு
UPDATED : செப் 17, 2013 12:00 AM
ADDED : செப் 17, 2013 08:42 AM
சென்னை: சங்க காலத்தில், தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில், எந்தெந்த இடங்களில் துறைமுகங்கள் இருந்தன என்பது குறித்து, தஞ்சை தமிழ் பல்கலை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவன நிதியுதவியுடன், மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு முடிவுகள், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் வெளிவரும்.
சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்படும், கடற்கரை பகுதிகளில், எந்தெந்த இடங்களில், வணிக நகரங்கள், பட்டினங்கள், துறைமுகங்கள் போன்றவை இருந்தன; தற்போது எவ்வாறு இருக்கின்றன; அப்பகுதியில், வேறு ஏதாவது துறைமுகங்கள் இருந்தனவா என்பது குறித்து, தஞ்சை தமிழ் பல்கலை, வரலாற்றுத் துறை தலைவர், அதியமான், பேராசிரியர் ராஜவேலு ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனம், ஆய்வுக்கு, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளது. இதுகுறித்து, பேராசிரியர்கள் ராஜவேலு, அதியமான் ஆகியோர், கூறியதாவது:
சங்க இலக்கியத்தில், அழகன் குளம், கொற்கை, பூம்புகார், காவிரி பூம்பட்டினம், முசிறி போன்ற இடங்களில், துறைமுகங்கள் இருந்ததற்கான, குறிப்புகள் உள்ளன. வெளிநாட்டு பயணி, தாலமியின் குறிப்புகளில், மேலும் பல துறைமுகங்கள் இருந்ததை, அறிய முடிகிறது.
இந்நிலையில், சங்ககாலத்தில், கடற்கரை பகுதிகளில், வணிக நகரங்கள், துறைமுகங்கள் எங்கு இருந்தன என்பது குறித்து, ஆய்வு நடத்தி வருகிறோம். முதலில், ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை, ராமேஸ்வரம் முதல் பூம்புகார் வரை என, இரண்டு கட்டமாக பிரித்து, ஆய்வு நடத்தி வருகிறோம்.
கடற்கரை பகுதிகளில் கிடைக்கும் தொல்பொருட்கள், கடற்கரை பகுதிகளின் அன்றைய, இன்றைய நிலை போன்றவற்றை, ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகிறோம். சங்க இலக்கியம், ஐம்பெரும் காப்பியங்கள் போன்றவற்றில் காணப்படும் குறிப்புகள், தற்போது அப்பகுதிகள் எந்த இடத்தில் இருக்கும் என்பது குறித்த யூகங்கள் போன்றவற்றின் அடிப்படையில், ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த ஆண்டு, மார்ச் மாதத்துக்குள், ஆய்வு முடிவுகள் வெளிவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
