திறமைகளை வளர்த்தால் வாய்ப்புகள் அதிகம்: டாக்டர் ஆர்.லட்சுமிபதி
திறமைகளை வளர்த்தால் வாய்ப்புகள் அதிகம்: டாக்டர் ஆர்.லட்சுமிபதி
UPDATED : செப் 17, 2013 12:00 AM
ADDED : செப் 17, 2013 08:58 AM
மதுரை: "வேலை வாய்ப்புகளில் போட்டிகள் அதிகரித்து வருவதால், மாணவர்கள் படிக்கும் போது திறமைகளை வளர்த்து, நல்ல வேலைகளுக்காக தங்களை தயார்படுத்த வேண்டும்" என சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.
கல்லூரியில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு துறை சார்பில் நடந்த "பிலிம் பஜார் 2013"ல் மாணவர்கள் தயாரித்த குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களை வெளியிட்டு அவர் பேசியதாவது: பணத்தை மையமாக வைத்து கல்வி இருக்கக் கூடாது. மாணவர்களுக்கு பயனுள்ள கல்வியை வழங்க வேண்டும். இதற்காக புதுமையான எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் அதை இக்கல்லூரியில் அறிமுகப்படுத்துகிறோம்.
பல இடங்களில் சரியான கல்வி கிடைக்காமல் மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். சில வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் பெயர்களிலும் ஏமாற்றப்படுகிறார்கள். எல்லா துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. சில ஆண்டுகளில் வங்கிப்பணிகளில் 5 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. எந்த வேலையாக இருந்தாலும் இன்று போட்டிகளும் அதிகம் உள்ளன. ஒரு வேலையிடத்திற்காக 500 பேர் போட்டியிடும் நிலை உள்ளது.
மாணவர்கள் படிக்கும் போது, கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து வசதிகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி, தங்கள் திறமைகளை வளர்த்து தகுதியான வேலைவாய்ப்புகளை பெறவேண்டும், என்றார். ஆவணப்படங்களான "வைகை", "உயிரகம்" மற்றும் குறும்படங்களான "அவா", "மவுனம்", "பொன் மகள் வந்தாள்", ஆகியவற்றை ராஜ் டிவி நிர்வாக இயக்குனர் நாச்சியப்பன் பெற்றுக்கொண்டார்.
கல்லூரி நிர்வாக மேலாண்மையர் ஆர்.ராம்குமார், முதல்வர் பத்மநாபன், ஆலோசகர் பாலகிருஷ்ணன், துறை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ராஜ் டிவி இணையதள மேலாளர் மது பங்கேற்றனர். மாணவர் சபரி வரவேற்றார். மாணவர் திவாகரன் நன்றி கூறினார்.
