அரசு உடற்கல்வி ஆசிரியருக்கு கல்வி மாமணி விருது வழங்கல்
அரசு உடற்கல்வி ஆசிரியருக்கு கல்வி மாமணி விருது வழங்கல்
UPDATED : செப் 18, 2013 12:00 AM
ADDED : செப் 18, 2013 08:15 AM
திருச்சி: அரசு உடற்கல்வி ஆசிரியரின் சேவையை பாராட்டி, அவருக்கு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் கல்வி மாமணி விருது வழங்கப்பட்டது.
திருச்சி பாலக்கரையில் உள்ள சையத் முர்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜீவானந்தம். இவர் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட அமைப்பாளராக பணியாற்றி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி., அமைப்பு வளரவும், அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமையவும் பாடுபட்டார். இதனால் உடற்கல்வி ஆசிரியர் ஜீவானந்தத்துக்கு, கடந்த, 2010ம் ஆண்டு தமிழக அரசின், டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் பெரம்பலூரில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் சார்பில் நடந்த ஆசிரியர் தினவிழாவில், உடற்கல்வி ஆசிரியர் ஜீவானந்தத்தின் சேவையை பாராட்டி, கல்வி மாமணி விருது வழங்கப்பட்டது. விழாவில் லயன்ஸ் சங்கங்களின் மாவட்ட தலைவர் இமயவரம்பன், கலைமாமணி விருது பெற்ற பேராசிரியர் ஞானசம்பந்தன், திருச்சி மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளர் சிவக்குமார், பெருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் திருச்சி டவுன்ஹாலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சரஸ்வதிக்கும், அவரது சேவையை பாராட்டி, ஆசிரியர் தினவிழாவில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் சார்பில், கல்வி மாமணி விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற ஆசிரியரை, பள்ளி ஆசிரியர்களும், மாணவிகளும், திருச்சி ராக்சிட்டி லயன்ஸ் சங்க செயலாளர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.
