மருத்துவ தேசிய தகுதித்தேர்வு வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்
மருத்துவ தேசிய தகுதித்தேர்வு வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்
UPDATED : செப் 20, 2013 12:00 AM
ADDED : செப் 20, 2013 08:49 AM
மதுரை: முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதித்தேர்வு முடிவு பட்டியலுக்கு தடை விதித்து, இதர பிற்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, திருத்திய பட்டியல் வெளியிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி, ஜெகன் தாக்கல் செய்த மனு: நாகூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிகிறேன். தொலைதூர கிராமங்களில், இரு ஆண்டு, ஏழு மாதங்கள் பணிபுரிந்துள்ளேன். முதுகலை எம்.டி., - எம்.எஸ்., மற்றும் பட்டயப் படிப்பிற்கு, 2013க்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) நடந்தது. தேர்வு எழுதியதில், எனக்கு, 38.7615 விகிதாச்சார மதிப்பெண் கிடைத்தது.
அகில இந்திய அளவிலான தகுதிப் பட்டியலில், 55,198வது ரேங்க், இதர பிற்பட்டோருக்கான ரேங்க் பட்டியலில், 17,055வது இடம் கிடைத்தது. இத்தேர்வுக்கு சில விதிகள் உள்ளன. தொலைதூர கிராமங்களில் பணிபுரிந்த அரசு மருத்துவ அலுவலர்களுக்கு, ஆண்டுக்கு, 10 சதவீதம் என கணக்கிட்டு, ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்.
எனக்கு கூடுதலாக, 30 சதவீத மதிப்பெண் வழங்கியிருக்க வேண்டும். இதனால், என் மதிப்பெண் விகிதாச்சாரம் அதிகரித்திருக்கும். அரசுப் பணியில் உள்ள மருத்துவ அலுவலர்களுக்கு, முதுகலை பட்டய படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றவில்லை. முதுகலை மருத்துவ படிப்பிற்கு அகில இந்திய அளவில், 9,075 இடங்கள் உள்ளன.
இதில், இதர பிற்பட்டோருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி, 2,436 இடங்கள் ஒதுக்கியிருக்க வேண்டும். தற்போது, 310 இடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளனர். இதுபற்றி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மருத்துவ கவுன்சிலிங் இயக்குனருக்கு மனு அளித்தேன்; நடவடிக்கை இல்லை.
முதுகலை மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதித்தேர்வு முடிவு பட்டியலுக்கு, தடை விதிக்க வேண்டும். விதிகள்படி, இதர பிற்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, திருத்திய பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும் .இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. தேசிய தேர்வு வாரியம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல மருத்துவ கவுன்சிலிங் இயக்குனர், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அக்., 3க்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
