UPDATED : செப் 21, 2013 12:00 AM
ADDED : செப் 21, 2013 10:12 AM
மதுரை: எப்படி எப்படியோ இருக்க வேண்டிய மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை, இன்றைக்கு மண்டல மையமாக சுருங்கி, இருக்க இடம் கேட்டு, கெஞ்ச வேண்டிய பரிதாப நிலையில் உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் ஒன்றுபட்ட சென்னை அண்ணா பல்கலை திருச்சி, கோவை, நெல்லை ஆகிய 3 பல்கலையாக பிரிக்கப்பட்டது. பின்னர், 2010 ல், மதுரை, சென்னையில் மேலும் 2 பல்கலைகள் உருவாக்கப்பட்டது. பெயர்க்குழப்பம் ஏற்படும் எனக் கருதி, புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைகளுக்கு, அந்தந்த ஊர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, அண்ணா தொழில்நுட்ப பல்கலை என உருவாக்கப்பட்டன.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி, மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. துணைவேந்தர், பதிவாளர் என பதவி ஏற்றனர்.
இப்பல்கலை நிர்வாக அலுவலகம் தற்காலிகமாக செயல்பட, மதுரை அழகர்கோவில் ரோட்டில், மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியின் பின்புறம் உள்ள ஒரு கட்டடம் ஒதுக்கப்பட்டது. இப்பல்கலைக்கு நிரந்தர கட்டடங்கள் கட்ட, கொடிக்குளம் கண்மாயில் 105 ஏக்கர் இடம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. பல்கலை வரப்போகிறது என்பதால், அப்பகுதி நிலமதிப்பு அதிவேகமாக உயர்ந்தது.
இந்நிலையில், ஆட்சி மாறியது. பல்கலை பிரிப்புகள், சென்னை அண்ணா பல்கலையின் கீழ், ஒருங்கிணைக்கப்பட்டன. மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை நிர்வாக அலுவலகம், சென்னை அண்ணா பல்கலையின் மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டது. துணைவேந்தராக இருந்தவர் சொந்த ஊருக்கு அனுப்பபட்டார்.
தங்களுக்கு சொந்தமான கட்டடத்தை, தர வேண்டும் என, மதுரை காமராஜ் பல்கலை அதிகாரிகள், மண்டல அலுவலக அதிகாரிகளை வலியுறுத்தினர். பல அறைகளை தங்களுக்கு வேண்டும் என காமராஜ் பல்கலையினர் கைப்பற்றினர். நிரந்தர கட்டடம் கட்ட, கொடுக்கப்பட்ட 105 ஏக்கரும் இப்போது பறிபோய் விட்டது. வேறு வழியின்றி மதுரை கலெக்டர் சுப்ரமணியத்திடம், இடம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
