உங்கள் சேவை நாட்டுக்கு தேவை: இளைஞர்களுக்கு விமானப்படை அழைப்பு
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை: இளைஞர்களுக்கு விமானப்படை அழைப்பு
UPDATED : செப் 22, 2013 12:00 AM
ADDED : செப் 22, 2013 10:09 AM
சூலூர்: "நாட்டுக்கு சேவை புரிய நினைக்கும் இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற முன் வரவேண்டும்" என, சூலூர் விமானப்படைத்தள ஏர் கமோடர் உமேஷ்குமார் பேசினார்.
இந்திய விமானப்படையின் 81வது ஆண்டு விழா வரும் அக்., 8ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சூலூர் விமானப்படைத்தளத்தில் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. பின், விமானப்படைத்தள ஏர் கமோடர் உமேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தென் பிராந்தியத்தில் சூலூர் விமானப்படைத்தளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள ஸ்குவாட்ரன்- 33 மற்றும் 25 படைப்பிரிவுகள், 1965, 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், 1999ல் கார்கில் போரிலும் முக்கிய பங்கு வகித்து எதிரிகளை வீழ்த்தின. கடந்த 2004ல் அந்தமானில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். பல்வேறு சமயங்களில் நிகழ்த்திய சாதனைகளுக்காக, இந்த இரு படைப்பிரிவுகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதியால் "ஸ்டாண்டர்டு" அந்தஸ்து வழங்கப்பட்டது.
கடந்த ஜூனில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்த 917 பேரை சூலூர் விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் காவிரியாற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்த நான்கு பேரை உயிருடன் மீட்டனர்.
நாட்டுக்கு சேவை புரியும் எண்ணம் உள்ள இளைஞர்கள், விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற முன் வரவேண்டும். வரும் 8ம்தேதி டில்லியில் விமானப்படையின் 81வது ஆண்டு விழா நடக்கிறது. அதையொட்டி சூலூர் தளத்தில் வீரர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
