கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள்: மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு
கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள்: மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு
UPDATED : செப் 23, 2013 12:00 AM
ADDED : செப் 23, 2013 10:29 AM
காரைக்குடி: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை விசாகா பள்ளி மாணவி டெங்கு பாதித்து பலியானதை தொடர்ந்து, பள்ளிகளில் பல்வேறு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு, தொடக்க கல்வி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அனைத்து பள்ளி வளாகத்திலும் நீர்தேக்க பள்ளங்கள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர், குடிநீர் தொட்டி மூடப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். பயனற்ற திறந்தவெளி கிணறை மூட வேண்டும். திறந்த நிலையில், கழிவுநீர் கால்வாய்கள் இருப்பின், சுகாதார துறையினை அணுகி கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பிற வைரஸ் நோய்கள் பரவுவது குறித்து, மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும், என காலை இறைவணக்கத்தின் போது, அறிவுறுத்தப்பட வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களின் டயர்களை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி வளாக கட்டடங்களின் மேற்கூரை பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறும், கட்டட பணிக்கு பயன்படுத்தும் தண்ணீர் நீண்ட நாள் தேங்காதவாறும் அப்புறப்படுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்திற்கு அருகில் (வெளிப்புறத்தில்) உள்ள சிறு பள்ளங்கள், பயன்படுத்தாத கிணறுகள் இருந்து, அதில் கொசுக்கள் உற்பத்தியாவது தெரிந்தால், தலைமை ஆசிரியர்கள், அவ்விடங்கள் பற்றிய விபரங்களை, சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தெரிவித்து, சுத்தம் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் வீடுகளில் ஆட்டு உரல், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகளில், மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
