வகுப்பறைகள் கட்ட நிலம் கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் தவிப்பு
வகுப்பறைகள் கட்ட நிலம் கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் தவிப்பு
UPDATED : செப் 24, 2013 12:00 AM
ADDED : செப் 24, 2013 09:51 AM
தியாகதுருகம்: பல்லகச்சேரி உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள பல்லகச்சேரி அரசுப்பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தியாகதுருகம் சென்று படித்து வந்த நிலையில், பல்லகச்சேரி பள்ளி தரம் உயர்த்தப்பட்டதால் இங்கு சேர்ந்து பலரும் பயனடைந்து வருகின்றனர்.
பள்ளி தரம் உயர்த்தப்பட்டதும், புதிய வகுப்பறை கட்டடம் கட்ட அரசு சார்பில் 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை கொண்டு பள்ளி வளாகத்தில் கட்டடம் கட்ட போதிய இடவசதி இல்லாததால் வேறு இடத்தில் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கான நிலத்தை பொதுமக்கள் தானமாக தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை யாரும் அதற்கு முன்வரவில்லை. தங்கள் ஊர் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும் என்று ஆர்வம் காட்டிய பலரும், கட்டடம் கட்டுவதற்கு இடம் தருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
தகுதியான நிலம் வைத்திருப்பவர்கள் அதனை பள்ளிக்கு கொடுக்க விருப்பமின்றி ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் போல் அதிக விலை கூறி புறக்கணிக்கின்றனர். இதனால் கட்டடம் கட்டும் பணிகளை துவக்க முடியவில்லை.
தற்போது பள்ளியில் 5 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் போதிய இடமின்றி வராண்டாவிலும், மரத்தடியிலும் மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்கவேண்டிய பரிதாப நிலை தொடர்கிறது. பள்ளிக்கட்டடம் கட்ட தேவையான நிலத்தை வாங்குதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
