கிராமப்புற மாணவருக்கு இலவச இன்ஜி., கல்வி: வழங்குகிறது வி.ஐ.டி.,
கிராமப்புற மாணவருக்கு இலவச இன்ஜி., கல்வி: வழங்குகிறது வி.ஐ.டி.,
UPDATED : டிச 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கிராம ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மையம் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க வாய்ப்பளிக்கும் ‘ஸ்டார்ஸ்’ திட்டம் வி.ஐ.டி., சார்பில் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராம பகுதி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு வி.ஐ.டி.,யில் இலவச கல்வி அளிக்கப்படும்.
அவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு , கல்விக் கட்டணம் அனைத்தும் இலவசம். இத்திட்ட துவக்க விழா வேலூர் வி.ஐ.டி., பல்கலையில் டிச. 11ம் தேதி நடந்தது. வி.ஐ.டி., மாணவர் நலன் டீன் சிதம்பரம் வரவேற்றார். திட்ட அலுவலர் தமிழ்மாறன் திட்டம் குறித்து பேசினார்.
வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
கிராமப்புற மாணவர்களுக்கு இந்த பல்கலை பயன்பட வேண்டும் என்பதற்காக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் ஆண், பெண் கல்வி அதிகளவு வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் நாட்டில் 18 முதல் 24 வயதுள்ளவர்கள் 10 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் உயர் கல்வி கிடைக்கிறது.
தமிழகத்தில் 14 வயதுள்ளவர்களில் 92 சதவீதம் பேர் மட்டும் தான் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கின்றனர். ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் 2 லட்சம் பேர் மட்டும் உயர் கல்வி படிக்கின்றனர். அனைவருக்கும் உயர் கல்வி அளிக்க வேண்டும்.
நகரப் பகுதிகளில் கிடைக்கும் கல்வி வாய்ப்பு கிராமப்புறங்களில் இல்லை. தமிழகம் நீண்ட காலமாக கல்வியில் முதலிடம் வகித்து வந்தது. இப்போது பின் தங்கிய நிலையில் உள்ளது. பின் தங்கியிருந்த ஆந்திரா, கர்நாடகா ஆகியவை கல்வியில் இப்போது முன்னேறி வருகின்றன. பாடம் கடினமாக இருந்தால் அதை மாற்றக்கூடாது. ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
‘ஸ்டார்ஸ்’ திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
அனைவரும் உயர் கல்வி படிப்பதற்காகத் தான் மத்திய பல்கலை, ஐ.ஐ.டி., க்கள் போன்றவை தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலத்துக்கு இணையாக நம் பாடத்திட்டம் இல்லை. பாடத்திட்டம் செறிவூட்டப்பட வேண்டும். அதற்காகத் தான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்வழி முறை கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டு கல்விமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
படிப்படியாக உயர் கல்வி வரையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும். வி.ஐ.டி.,யில் துவங்கப்பட்டுள்ள ‘ஸ்டார்ஸ்’ திட்டம் ஏழு மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் என தெரிகிறது. இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரின் கோரிக்கையை ஏற்று வேந்தர் விசுவநாதன், ‘அடுத்த கல்வி ஆண்டு முதல் ‘ஸ்டார்ஸ்’ திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்’ என்றார்.
விழாவில், வி.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதல் 50 இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பரிசு வழங்கினார்.
