செஸ் விளையாட்டுக்கு ஒதுக்கிய ரூ.22 லட்சம் என்னாச்சு?
செஸ் விளையாட்டுக்கு ஒதுக்கிய ரூ.22 லட்சம் என்னாச்சு?
UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 08:51 AM
மதுரை: பள்ளிகளில், செஸ் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.22 லட்சத்தை ஒதுக்கியதாக அறிவிப்பு வெளியிட்டும் இன்னமும் தொகை தரப்படவில்லை.
ஏழு மாதங்களுக்கு முன் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டு பள்ளியளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அடுத்த கட்டமாக, ஒன்றிய, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை மாணவர்களுக்கு எந்த பரிசுத்தொகையும் தரவில்லை. சமீபத்தில் சென்னையில் மாநில போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. மற்ற போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பயணப்படி, பரிசுத் தொகை தரப்படும்.
இந்த விளையாட்டுக்கென மாநில அளவில் ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டதாக ஏழு மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டது. இத்தொகை, மாவட்ட அளவில் இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மகளிர் பிரிவில் 12, ஆடவர் பிரிவில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்களை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்துடன், அரசுப் பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், தங்களது சொந்த செலவில் மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். போட்டியில் கேன்வாஸ் ஷூ அணிய வேண்டுமென்பதால் அதற்கும் மாணவர்கள் செலவு செய்து உள்ளனர்.
விளையாட்டில் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமெனில், அதற்குரிய வசதியை தமிழக அரசே செய்து தர வேண்டும். அப்போது தான் விளையாட்டின் நோக்கம் நிறைவேறும். அரசு அறிவித்த ரூ.22 லட்சத்தை உடனடியாக வழங்கினால் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடியும்.
