டி.டி., கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிகளில் சேர்க்க தடையில்லை
டி.டி., கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிகளில் சேர்க்க தடையில்லை
UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 08:53 AM
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, டி.டி., மருத்துவக் கல்லூரியில் படித்த 150 மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
டி.டி., மருத்துவக் கல்லூரி சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கிய அனுமதியின் படி, 150 மாணவர், 2010-11ல், சேர்க்கப்பட்டனர். அதற்கு அடுத்த கல்வியாண்டுக்கு ஒப்புதல் பெறப்படவில்லை. தற்போது எங்கள் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை, 2010-11 முதல் வாபஸ் பெறும்படி மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்து உள்ளது.
அனுமதியின்றி மாணவர் சேர்க்கப்பட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக, கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெற முடியாது. மேலும், எங்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 150 மாணவர்களை, அரசு கல்லூரிகளுக்கு மாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மாணவர்களை மாற்றுவது சரியல்ல.
கவுன்சிலிங் துவங்கி விட்டது. அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு விட்டால், இந்த மனு அவசியமற்றதாகி விடும். எனவே, 150 மாணவர்களையும், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்ற இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், அரசுக்கும் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் வி.பி.ராமன், "மாணவர்களின் நலன் கருதி தான், அரசு கல்லூரிகளில் சேர்க்க கவுன்சில் அனுமதி வழங்கியது" என்றார்.
தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர், கிருஷ்ணகுமார், "கவுன்சிலிங் முடிந்து விட்டது; 149 மாணவர்களுக்கு, ஒதுக்கீட்டுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு விட்டன. பெரும்பாலான மாணவர்கள், கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்" என்றார்.
இதையடுத்து, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: டி.டி., மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய அனுமதியை, வாபஸ் பெறும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைத்த இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. டி.டி., கல்லூரியை, அரசு வசம் எடுக்கக் கோரி, பெற்றோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது தான், 150 மாணவர்களையும், அரசு கல்லூரிகளில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதித்து உள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பின் தான் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.
பெரும்பாலான மாணவர்கள், அரசு கல்லூரிகளில் சேர்ந்து விட்டதாக சிறப்பு அரசு பிளீடரும் தெரிவித்து உள்ளார். இவ்வழக்கில் மாணவர்களை சேர்க்கவில்லை. எனவே, அரசுக்கு தடை விதிப்பது நியாயமற்றது. இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தால் மாணவர்களுக்கு பெரிய அளவில் இழப்பு, கஷ்டம் ஏற்படும். 150 மாணவர்களின் பட்டியலும், மனுதாரர் வசம் இல்லை என கூற முடியாது. அவர்களை வழக்கில் சேர்க்க எதுவும் தடுக்கவில்லை.
அரசுக்கு தடை விதித்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தற்போது அரசுக்கு தடைவிதிக்க இயலாது. மனுதாரர் எழுப்பியுள்ள கேள்வி இறுதி விசாரணையின் போது முடிவு செய்ய வேண்டியது. "ரிட்" மனுத்தாக்கல் செய்த பின் தான் மாணவர்களை மாற்றும் நடவடிக்கை துவங்கியது.
எனவே மனு நிலுவையில் இருக்கும் போது, மாணவர்கள் மாற்றம் தொடர்பாக அரசு பிறப்பித்த எந்த உத்தரவும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. இடைக்காலத் தடை கோரிய மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டு உள்ளார்.
