பிரிட்டன் ஓராண்டு முதுநிலை படிப்புகள் - இந்திய அங்கீகார சிக்கலுக்கு தீர்வு!
பிரிட்டன் ஓராண்டு முதுநிலை படிப்புகள் - இந்திய அங்கீகார சிக்கலுக்கு தீர்வு!
UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 10:26 AM
பிரிட்டனில் வழங்கப்படும் ஓராண்டு முதுநிலைப் படிப்புகள், இந்தியாவில் அங்கீகரிக்கப்படுவதில்லை. எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க, பிரிட்டனில் ஓராண்டு முதுநிலைப் படிப்பை முடித்துவரும் இந்திய மாணவர்களின் நெருக்கடியை களைய, ஆறு மாதகால இணைப்பு படிப்பு என்ற ஒரு புதிய தீர்வை, மத்திய மனிதவள அமைச்சகம் கொண்டு வந்துள்ளது..
இதன்மூலம், அப்படிப்பை முடித்து இந்தியா திரும்பும் மாணவர்களின் கல்வித் தகுதி ஏற்கப்பட வேண்டுமெனில், அவர்கள், இங்கே, 6 மாதகால இணைப்பு படிப்பை(Bridge course) மேற்கொள்ள வேண்டும். மானுடவியல் துறையில் முதுநிலைப் படிப்பை முடித்துவரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த இணைப்பு படிப்பின் மூலம் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரிட்டனின் ஓராண்டு மேலாண்மை படிப்பை அங்கீகரிப்பதற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, அப்படிப்பை முடித்துவரும் மாணவர்கள், ஒரு இந்திய நிறுவனத்தில் 6 மாதகால இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டும்.
இந்த இணைப்பு படிப்பை(Bridge course) வழங்க, மொத்தம் 7 இந்தியப் பல்கலைகள் தேர்வு செய்யப்ப்பட்டுள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலை, ஆந்திரா, இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய இடங்களிலுள்ள மத்திய பல்கலைகள், ராஜஸ்தான் பல்கலை, கொல்கத்தா பல்கலை மற்றும் குருநானக் தேவ் பல்கலை போன்றவையே தேர்வு செய்யப்பட்ட அந்தப் பல்கலைகள். அதாவது, நாடு முழுவதும் அமையும்படி, மேற்கூறிய பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஓராண்டு பிரிட்டன் முதுநிலைப் படிப்பிற்கான இந்திய அங்கீகாரப் பிரச்சினை பல்லாண்டுகளாக இருந்து வந்தது. இதுதொடர்பாக, பிரிட்டன் அரசாங்கம், இந்தியாவிடம் தொடர்ந்து பேசி வந்தது. தற்போதுதான் இதற்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த Bridge course முடித்தப்பிறகு, நேரடியாக எம்.பில் அல்லது பிஎச்.டி., படிப்புகளை இந்தியாவில் மேற்கொள்ளலாம். இந்த இணைப்பு படிப்பு ஆலோசனை, இந்தியப் பல்கலைகள் கூட்டமைப்பால் வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக, இந்த இணைப்பு படிப்பு நடைமுறை, பீகார் மாநிலத்திலிருந்து 2 வருட இளநிலைப் படிப்புகளை முடித்துவரும் மாணவர்களை முதுநிலைப் படிப்புகளில் சேர்த்துக்கொள்ள, டெல்லி பல்கலையால் பின்பற்றப்பட்டு வந்தது என்பது நினைவு கூறத்தக்கது.
