அகிலஸ்ஸின் குதிகால் போன்றது உயர்கல்வி தரக்குறைபாடு: ஹமீது அன்சாரி
அகிலஸ்ஸின் குதிகால் போன்றது உயர்கல்வி தரக்குறைபாடு: ஹமீது அன்சாரி
UPDATED : நவ 15, 2013 12:00 AM
ADDED : நவ 15, 2013 03:44 PM
சென்னை: உயர்கல்வியில் தரப் பற்றாக்குறை என்பது அகிலஸ்ஸின் குதிகாலைப் போல் பிரச்சினை ஏற்படுத்தக்கூடியது. எனவே, அக்குறையைப் போக்க, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது இதை அவர் இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: உலகின் கவனம் அறிவுப் பொருளாதாரத்தை நோக்கி இருக்கிறது. எனவே, உருவாகும் மனிதவளத்தின் தரம் எந்தளவு இருக்கிறதோ, அதுவே, நாடுகளுக்கிடையிலான போட்டித் தன்மையை தீர்மானிக்கும்.
வளர்ந்த நாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள், 2020ம் ஆண்டுகளில், திறன்வாய்ந்த மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கின்றன. ஆனால், அதே காலகட்டத்தில், இந்தியாவில் தேவையைவிட அதிகமான அளவில் பட்டதாரிகள் இருப்பார்கள்.
எனவே, நமது உயர்கல்வியில் இருக்கும் குறைபாட்டை சரிசெய்துவிட்டால், நாம் பெறும் இடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கல்வியை பரவலாக்கும்போது, பிராந்திய மற்றும் சமூக அளவில் சமத்துவம் பேணப்படுவது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
