ஜெயித்து காட்டுவோம்: மழையை பொருட்படுத்தாத மாணவர்கள்
ஜெயித்து காட்டுவோம்: மழையை பொருட்படுத்தாத மாணவர்கள்
UPDATED : நவ 17, 2013 12:00 AM
ADDED : நவ 17, 2013 09:43 AM
திருத்தணி: தினமலர் நாளிதழ் நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி திருத்தணியில் 8ம் ஆண்டாக நேற்று நடந்தது. இதில் திரளான மாணவ, மாணவியர், மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர்.
தினமலர் நாளிதழ் சார்பில், அரசு தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 8ம் ஆண்டாக, நேற்று, அங்குள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர்.
காலை முதல், பெய்த மழையை பொருட்படுத்தாமல், மாணவர்கள் அரங்கில் குவிந்தனர். காலை, 8:00 மணிக்கு, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, மாணவர்களுக்கு மாதிரி வினா - விடை, பேனா, நோட்டு புத்தகம் ஆகியவை இலவசமாக, வழங்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்து மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், அரும்பாக்கம் மேல்நிலைப் பள்ளி கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர் முனிராமையா, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் தாயுமானவன், முத்தையால்பேட்டை மேல்நிலைப் பள்ளி சமூக அறிவியர் ஆசிரியர் முரளிகிருஷ்ணா ஆகியோர், ஆலோசனைகள் மற்றும் குறிப்புக்களை வழங்கினர்.
மாலையில் நடைபெற்ற, பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஆனந்தன் இயற்பியல் பாடத்திற்கும், ஆசிரியர்களான சரவணன் வேதியியல் பாடத்திற்கும், ரமேஷ் கணிப்பொறி பாடத்திற்கும், சீனிவாசன் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்திற்கும், ரவி பொருளியல் பாடத்திற்கும், மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.
இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஸ்ரீதரன் கணிதப் பாடத்திற்கும், எம்.சி.எம்., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சவுந்திரபாண்டியன் உயிரியல் பாடத்திற்கும் விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன், அப்பல்லோ குரூப் ஆப் கல்வி நிறுவனங்கள், இந்திரா குரூப் ஆப் கல்வி நிறுவனங்கள், தங்கவேலு பொறியியல் கல்லூரி, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, பூர்விகா மொபைல்ஸ், ஜெ.என்.என்., தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்கின.
அவசரத் தேவைக்கு, தீயணைப்புத் துறை வாகனம், 108 வாகனம் மற்றும் கே.கே. சத்திரம், திருவாலங்காடு போலீஸ் உதவி ஆய்வாளர்கள் குமார், ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
