ஆசிரியர் பள்ளிகளை மீண்டும் ஆய்வு செய்ய ஐகோர்ட் தடை
ஆசிரியர் பள்ளிகளை மீண்டும் ஆய்வு செய்ய ஐகோர்ட் தடை
UPDATED : டிச 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் ஆய்வு செய்ய ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோசப் செல்லமுத்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தாளாளர் சுலோச்சனா தாக்கல் செய்த மனு:
கடந்த 5ம் தேதி, பெங்களூரில் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் மண்டல இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சத்யம் என்பவர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அங்கீகாரம் பெற்ற சில ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் விதிமுறைகள் மற்றும் தரத்தை பராமரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கூறப்பட்டுள்ளது. 71 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை இவ்வாறு ஆய்வு செய்வதாகவும், அதில் எங்கள் பள்ளியும் ஒன்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அடங்கிய நிபுணர்கள் குழு நேரில் வந்து ஆய்வு செய்வதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாக நோட்டீஸ் உள்ளது. எங்கள் பள்ளிக்கு எதிராக, குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவும் நோட்டீசில் குறிப்பிடப்படவில்லை.
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ள 71 கல்வி நிறுவனங்களையும் மீண்டும் ஆய்வு செய்வதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்து எதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரியவில்லை. எனவே, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் மற்றொரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சுரேஷ் குமார் வாதாடினார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு நீதிபதி சுகுணா இடைக்கால தடை விதித்து, மனுக்களுக்கு பதிலளிக்க ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
