பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? டி.ஏ.வி., பள்ளி முதல்வர் ஆலோசனை
பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? டி.ஏ.வி., பள்ளி முதல்வர் ஆலோசனை
UPDATED : டிச 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கல்விமலர் இணையதள அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர், பெற்றோர் ஆர்வமுடன் தொடர்புகொண்டு கல்வி சம்பந்தமான தங்களது பொதுவான சந்தேகங்களை கேட்டனர்.
மாணவர், பெற்றோரது கேள்விகளும், அதற்கு சென்னை டி.ஏ.வி., பள்ளி முதல்வர் சி.சதீஷ் அளித்த பதில்களும் வருமாறு:
எனது மகன் பிளஸ் 2 கெமிஸ்ட்ரி பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. டியூசன் செல்லவதாக கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றான். இதுவரை வீடு திரும்பவில்லை. திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். இனி அவன் தேர்வு எழுத முடியுமா?
-பாபு பாட்சா, அலங்காநல்லூர்
ஒரு தேர்வில் திடீரென்று தோல்வியடைந்ததால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாகத்தான் உங்களது குழந்தை வெளியேறியிருப்பான். முதலில் அவனை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுங்கள். இந்த செய்தியை படித்தபின், நிச்சயம் உங்களது மகன் கிடைப்பான் என்று நம்புகிறேன். உங்களது மகனிடம் கோபித்துக்கொள்ளாதீர்கள். அன்பு காட்டுங்கள். தன்னம்பிக்கையை வளருக்கும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள். அவனால் எதையும் சாதிக்க முடியும். பள்ளிக் கல்வி அதிகாரிகளை அணுகி சிறப்பு அனுமதி பெற்றால் தேர்வு எழுத முடியும்.
பத்தாம் வகுப்பு படிக்கும் எனது மகள் மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறாள். கணிதப்பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண்களே பெறுகிறாள். அடுத்த என்ன படிக்கவைப்பது?
-புவனேஸ்வரி, கோவை
கணிதப்பாடத்தின் மீது குழந்தைகளுக்கு பயம் இருக்கலாம். அதற்காக நீங்கள் கட்டாயப்படுத்த வேண்டாம். முடிந்தவரை அதிக மதிப்பெண் எடுக்க நம்பிக்கை ஊட்டுங்கள். எந்த ஒரு பாடத்தின் மீதும் பயம் கொள்ளத் தேவையில்லை; மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் படிக்க வேண்டும் என்பதை உணர்த்துங்கள். அதோடு கணிதம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை நீங்களும் ஞாபத்தில் கொள்ளுங்கள். அடுத்ததாக, பிளஸ் 1 படிப்பில் கணிதப்பாடம் தவிர்த்து காமர்ஸ் போன்ற பாடப்பிரிவை தேர்வுசெய்யலாம். பி.ஏ., பொருளாதாரம், பி.பி.ஏ., போன்ற படிப்பைத்தொடர்ந்து எம்.பி.ஏ., படிக்க வைக்கலாம். குழந்தையிடம் எந்த திறமை உள்ளதோ அதனை ஊக்குவியுங்கள். மாணவருக்கு பிடிக்காத பாடத்தை எடுத்து படிக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம்.
பத்தாம் வகுப்பு படிக்கும் எனக்கு எளிதில் கவனம் சிதறிவிடுகிறது. படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. நான் என்ன செய்வது?
-நாராயணன், சென்னை
இதற்கு உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அதுதான் உங்களது கவனச் சிதறலுக்கு காரணாமா என்பதை பரிசோதியுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில் கட்டுப்பாடுடன் படிக்க கற்றுக்கொள்ளுங்கள். நன்கு படித்தால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து, குறிக்கோளுடன் படியுங்கள். படிக்கும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள். என்னால் சாதிக்க முடியும் என்று மனதிற்குள் அடிக்கடி கூறுங்கள். அதே எண்ணத்துடன் படியுங்கள். கண்டிப்பாக, நீங்கள் சாதிப்பீர்கள்.
பிளஸ் 2 படிக்கும் எனது மகன் அதிகநேரம் போன் பேசுகிறான். பொதுத்தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு தாயாகிய நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
-இந்துமதி, பாண்டிச்சேரி
5 நிமிடம், 10 நிமிடம் போன் பேசுவதோ, டிவி பார்ப்பதோ தவறில்லை. ஆனால், அதுவே நீண்ட நேரம் தொடருவது நல்லதல்ல. இதற்கு பெற்றோர் தான் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். அதற்காக கண்டிக்கக் கூடாது. ‘உனக்கு தொலைபேசியில் பேசுவது முக்கியமா? அல்லது வாழ்க்கையில் முன்னேறுவது முக்கியமா? என்று உங்களது மகனிடம் அன்பாக கேளுங்கள். தேர்வு முடிந்தபிறகு, தொலைபேசியில் பேசிக்கொள் என்று கூறுங்கள். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதன் அவசியத்தை உணரச் செய்யுங்கள்.
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ சேர்ந்த எனது மகன் அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டான். அதன்பிறகு, மூன்றுமாத கம்ப்யூட்டர் ஹார்வர்டு படித்துள்ளான். இதற்கு பிறகு, என்ன படிக்க வைக்கலாம்?
-ரஞ்சனி, குரோம்பேட்டை
பெரிய வேலைக்கு செல்ல இப்படிப்பு மட்டும் போதாது. குறைந்தபட்சம் பி.சி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பட்டப்படிப்பு படிக்க வேண்டும். அதற்கு முதலில், ரெகுலர் அல்லது பிரைவேட் முறையில் பிளஸ் 2 படிக்க அறிவுறுத்துங்கள். இதில் ஈடுபாடு இல்லை என்றால், (என்.ஐ.ஐ.டி., ஆப்டெக், எஸ்.எஸ்.ஐ.,போன்ற) சிறந்த தனியார் கம்ப்யூட்டர் கல்வி மையங்களில் ஓன்றரை ஆண்டு கம்ப்யூட்டர் படிப்பை படிக்க வையுங்கள். இந்த சான்றிதழுக்கு நல்ல மதிப்பு உள்ளது. இதற்கு முதலில் உங்களது மகனிடம் படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டுங்கள்.
எனது மகன் 3ம் வகுப்பு படிக்கிறான். பிளஸ் 2வில் அதிகமதிப்பெண் எடுத்து வாழ்க்கையில் சாதிக்க, நான் இப்போதிருந்தே எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
-சாந்தி, வில்லிவாக்கம்
இது முக்கியமாக படிக்கும் பள்ளியையும், பெற்றோரின் ஒத்துழைப்பையும் பொறுத்து உள்ளது. குழந்தைகளிடம் நேர்முகமான சிந்தனைகளையும், தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று தற்போதிருந்தே வற்புறுத்த வேண்டாம். அதற்காக அலட்சியமாகவும் இருந்துவிட வேண்டாம். குறைந்தபட்சம் 6ம் வகுப்பில் இருந்து குழந்தைகள் மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும். சிறப்பாக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புவதை உங்களது செயல்பாட்டால் குழந்தைக்கு உணர்த்துங்கள். தினமும் குறைந்தபட்சம் 2 மணிநேரமாவது குழுந்தைகளிடம் நேரத்தை செலவிடுங்கள். அப்போது உங்களது அக்கறையை வெளிப்படுத்துங்கள். மற்றபடி, நிர்பந்திக்காதீர்கள். அவ்வாறு செய்தால், படிப்பு மேல் வெறுப்பு வர வாய்ப்புண்டு. அதற்காக, அன்பு போன்ற போர்வையில் அதிக சுதந்திரத்தையும் தரக்கூடாது. மாணவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்பதை அவ்வப்போது பள்ளி ஆசிரியர்களிடமும் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
எனது தம்பி பத்தாம் வகுப்பு படிக்கிறான். பொதுத்தேர்வுக்கு எப்படி தயார்படுத்துவது?
-கோபிகிருஷ்ணன், நாகப்பட்டிணம்
-ராஜேஸ்வரி, மதுரை
பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பு 2 முறையாவது பாடங்களை ‘ரிவிஷன்’ செய்திருக்க வேண்டும். அனைத்து பாடங்களும் முக்கியமானவை என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். பி, க்யூ, ஆர், எஸ், டி, (பி-பிரிவ்யூ, க்யூ-க்விஸ்டீனிங், ஆர்-ரீடிங், எஸ்-ஸ்டேட்டிங், டி-டெஸ்டிங்) என்ற ‘டெக்னிக்’கை கடைபிடிக்கச் செய்யுங்கள். பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வு மட்டுமே போதாது. வாரத்திற்கு ஒரு மணிநேரமாவது சுயமாக தேர்வு எழுதி பார்க்க வேண்டும். தொடச்சியாக ஒருமணிநேரம் படித்தாலே சிறிது தளர்வு ஏற்படும். எனவே, ஒரு மணிநேரம் படித்தால் 15 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடருங்கள். இவற்றை முறையாக கடைபிடித்தால், பொதுத்தேர்வில் கண்டிப்பாக அதிக மதிப்பெண் எடுக்க முடியும்.
பத்தாம் வகுப்பு படிக்கிறேன். இஸ்ரோவில் சேர நான் என்ன செய்யவேண்டும்?
-கோபிகண்ணன், அன்னூர்
பத்தாம்வகுப்பு முடித்து, மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே சேர வேண்டும் என்றில்லை. பட்டப்படிப்பில் பி.எஸ்சி., இயற்பியல் படித்தால் கூட போதுமானது. ஆனால் சிறப்பாக படிக்க வேண்டும். அதன்பிறகு முதுநிலை பட்டப்படிப்பும், இத்துறைகளில் ஆராய்ச்சியும் மேற்கொண்டால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் அமைப்புகளில் சேர முடியும்.
படித்ததை ஞாபகம் வைத்துக்கொள்ள என்ன செய்வது?
-முகமது ரிஸ்வான், மடிப்பாக்கம்
பார்த்து படித்ததை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாவிட்டால், எழுதிப் படிக்கணும். அதுவே சரியான தீர்வு. எழுதிப் படித்தால் தான் மனதில் நிலைத்திருக்கும். படித்தது மறந்து போகாது.
பிளஸ் 1 பயோலஜி பாடப்பிரிவு படிக்கும் எனது மகன் பள்ளித் தேர்வுகளில் 2வது ரேங்க் எடுத்துவிடுவான். 190 மதிப்பெண்களாவது பெற்றுவிடுவான். டாக்டராக வரவேண்டும் என்பது அவனின் குறிக்கோள். அதற்காக, 200க்கு 200 மதிப்பெண் எடுக்க என்ன செய்யவேண்டும்?
-திவ்யா, மேற்கு மாம்பலம்
200க்கு 200 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முனைப்புடன் படிப்பது நல்லதுதான். அதற்காக, தற்போதைய நிலைப்படி முழுமதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனெனில், கடந்த 3 ஆண்டுகளாக, எம்.பி.பி.எஸ்., கட்-ஆப் மதிப்பெண் குறைந்து வருகிறது. சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தும் இன்ஜினியரிங் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். இதற்கு நான்கு ஆண்டு படிப்பிற்கு பின் உடனடி வேலை கிடைப்பதே காரணம். நன்கு படிக்கும் உங்களது மகனை நம்பிக்கையுடன் படிக்க சொல்லுங்கள். பி.டி.எஸ்., பயோடெக்னாலஜி போன்ற துறைகளிலும் வாய்ப்பு இருக்கிறது. நன்கு படிக்கும் உங்களது மகன் டாக்டராக எனது வாழ்த்துக்கள்.
ஒன்பதாவது படிக்கும் எனது மகன் படிப்பில் ‘டல்’லாக இருக்கிறான். என்ன செய்வது?
-மாலதி, மைலாப்பூர்
அனைத்து மாணவரும் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்பு இருந்தாலும், அனைவரும் மிகச்சிறப்பாக படிப்பதில்லை. ஆனால், குறைந்தபட்சம் அனைவராலும் தேர்ச்சி பெற முடியும். அதற்காக, யாரும் திறமையில்லாதவர்கள் என்று கருதவேண்டியதில்லை. உங்களது மகனின் கல்வி கற்கும் திறனுக்கு ஏற்ப, படிக்க வையுங்கள். நம்பிக்கையூட்டுங்கள். 10ம் வகுப்பில் நிச்சயம் பெயிலாக முடியாது. ஊக்கம் கொடுங்கள்; வெற்றி நிச்சயம்.
