UPDATED : டிச 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “அறிவு சார்ந்த சமூகமாக இந்தியாவை மாற்ற ஐ.ஐ.டி.,யில் படித்தவர்கள் முன்வர வேண்டும்,” என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
இந்திய ஐ.ஐ.டி.,க்களின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கை சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடத்துகின்றனர். இந்த கருத்தரங்கை, வீடியோ கான்பரன்சிங் முறையில் டில்லியில் இருந்தபடி பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 19ம் தேதி துவக்கி வைத்தார்.
அப்போது பிரதமர் பேசியதாவது:
கடந்த 60 ஆண்டுகளில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை ஐ.ஐ.டி., நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. ஐ.ஐ.டி.,யில் படித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். ஐ.ஐ.டி.,யில் படித்தவர்களில் பெரும்பாலோர் நம் நாட்டில் பல்வேறு துறைகளில் தலைவர்களாக பொறுப்பு வகிக்கின்றனர். அவர்கள், சிறந்த கல்வியாளர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, தொழிலதிபர்களாக, கொள்கைகளை வகுப்பவர்களாக மற்றும் சமூக மாற்றத்திற்கு வழி வகுப்பவர்களாகவும் விளங்குகின்றனர்.
அறிவுசார் சக்தியாக இந்தியா மாறி வருகிறது. இதில், ஐ.ஐ.டி.,க்களுக்கு கணிசமான பங்கு உண்டு. ஐ.ஐ.டி., வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது அதன் தன்னாட்சி முறை. இதேபோல் மற்ற முன்னணி கல்வி நிறுவனங்களும் அதிக அதிகாரங்களுடன் தன்னாட்சி முறையில் செயல்பட வேண்டும்.
கடுமையான போட்டிகள் நிறைந்த மாணவர் சேர்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால், சிறந்த மாணவர்களால் மட்டுமே இங்கு சேர்ந்து படிக்க முடிகிறது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியா தலைமை ஏற்க வேண்டுமென்றால், இத்தகைய இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது.
இதற்கு ஐ.ஐ.டி., போன்று அதிகமான கல்வி நிறுவனங்கள் தேவைப்படுகின்றன. இதை உணர்ந்து தான் 11வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் புதிதாக எட்டு ஐ.ஐ.டி.,க்களை உருவாக்கியுள்ளோம். நடப்பு கல்வியாண்டில் ஆறு ஐ.ஐ.டி.,க்களை துவக்க இருக்கிறோம். இவை தவிர, 30 மத்திய பல்கலைக்கழங்கள், ஏழு ஐ.ஐ.எம்., நிறுவனங்கள், 10 தேசிய தொழில்நுட்ப பயிலகங்கள், ஐந்து இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களை துவக்க உள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்திய அணுசக்தி பாதுகாப்பு முகமையின் தலைவர் அனில் ககோத்கர், நாடு முழுவதிலும் உள்ள ஐ.ஐ.டி.,க்களின் இயக்குனர்கள், முன்னாள் மாணவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். டிச. 21ம் தேதியும் கருத்தரங்கு நடக்கிறது. இதில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி, வருங்கால சவால்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
