தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்திகளால் உற்சாகம், அறிவு பெறுகிறேன்: கருணாநிதி

தினமலர் செய்திகளால் உற்சாகம், அறிவு பெறுகிறேன்: கருணாநிதி

தினமலர் செய்திகளால் உற்சாகம், அறிவு பெறுகிறேன்: கருணாநிதி


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“தினமலர் பத்திரிகையை நாள்தோறும் படிக்கிறேன். அதனுடைய ஆதரவு கட்டுரைகளால் உற்சாகம் பெற்று, எதிர்ப்பு கட்டுரைகளால் அறிவு பெற்றுள்ளேன்,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.
சென்னையில் டிசம்பர் 21ம் தேதி நடந்த, ‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு தபால்தலை வெளியீட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
ஒரு நாட்டுக்கு எடுக்கிற விழா போல, ஓர் ஏட்டுக்கு எடுக்கிற விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. ‘தினமலர்’ நிறுவனர் பெரியவர் டி.வி.ஆர்., விட்டுச்சென்ற பணியை யாரால் இட்டு நிரப்ப முடியும் என்ற கேள்விக்கு, எங்களால் முடியும் என்று முன்வந்து, தொடர்ந்து அந்தப் பணியை நடத்திக்கொண்டிருக்கிற அந்த குடும்பத்தை சார்ந்த பெரியோர், நண்பர்களை  பாராட்டுகிறேன்.
இந்தப் பணிக்குரிய ஆர்வலர்களாக அவர்கள் விளங்கக் காரணம் டி.வி.ஆர்., தான். தினமலர் நிறுவனரை, ராமசுப்பையர் என்று அழைத்தாலும் கூட, சுருக்கமான பெயரில் டி.வி.ஆர்., என்று அழைப்பதிலே அவரது நண்பர்கள், குடும்பத்தார், உற்றார் உறவினர்கள் அனைவரும் பெருமை கொள்ளுவர்; நானும் அதைப் போல பெருமைப்படுகிறேன்.
‘தினமலர்’ பத்திரிகை குழுமத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பு, இந்த விழாவிற்கு வந்த வகையில் மட்டுமல்ல, அந்தப் பத்திரிகையை நாள்தோறும் படிக்கிற வகையில் மட்டுமல்ல; அதனுடைய ஆதரவுக் கட்டுரைகளால் உற்சாகம் பெற்று, எதிர்ப்பு கட்டுரைகளால் அறிவு பெற்று, அந்த வகையில் இந்த ஏட்டுக்கும், ஏடு நடத்துகின்ற நண்பர்களுக்கும் நீண்ட காலமாக உறவு உண்டு.
நான் தவறு செய்கிற நேரத்தில், எனக்கு தவறு என்று பட்டு தவறு செய்தாலும் அல்லது தினமலர் நாளிதழுக்கு தவறு என்று பட்டாலும், அந்த நேரத்தில்தான் அவர்கள் என்னை தாக்கியோ, விமர்சித்தோ எழுதுவர். பாக்கி நேரங்களில் நான் ‘டீ கடை பெஞ்சில்’ கூட இடம் பெறுவதில்லை.
இன்று, கன்னியாகுமரி மாவட்டம் தனி மாவட்டமாக இருப்பதற்கு டி.வி.ஆரின் அரும்பெரும் ஆலோசனை தான் முக்கியக் காரணம். அனுபவ கருவூலங்களை டி.வி.ஆர்., அலட்சியப்படுத்தியது இல்லை. டி.வி.ஆர்., போன்றவர்களின் ஆற்றலை, அரிய யோசனைகளை பக்தவச்சலம் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் அலட்சியப்படுத்துவது இல்லை என்பதற்கு அடையாளமாகத் தான் கன்னியாகுமரி தனி மாவட்டமாக கிடைத்திருக்கிறது. இல்லாவிட்டால் அது திருநெல்வேலியுடனோ, ஏமாந்தால் திருவனந்தபுரத்தோடோ போயிருக்கக் கூடும்.
நம்முடைய டி.வி.ஆரின் அரிய முயற்சிகளின் காரணமாக, அவருடைய விவாதங்கள், எடுத்துவைத்த வாதங்களால் தான் கன்னியாகுமரி கிடைத்துள்ளது. ‘குமரி முதல் இமயம் வரை’ என்று நாம் பெருமையாக இந்தியாவைப் பற்றி  பேசும்போது, எடுத்த எடுப்பிலேயே குமரி என்று சொல்லும்போது அந்த பெருமையும், வாய்ப்பும், பேறுக்கும் காரணமானவர்களில் ஒருவர் டி.வி.ஆர்., என்பதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
செம்மொழி என்ற தகுதி தமிழுக்கு இன்று கிடைத்திருக்கிறது. ராமசுப்பையர் இருந்திருந்தால் இதை பாராட்டியிருப்பார்; அதற்காக நாங்கள் எல்லாம் கூட பாடுபட்டோம், குரல் கொடுத்தோம் என்று  சொல்லியிருப்பார். தமிழை செம்மொழியாக்க முதல் குரல் கொடுத்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. இவர் பரிதிமாற்கலைஞர் என்ற தனித்தமிழ் பெயருடன் விளங்கியவர். 100 ஆண்டுகளுக்கு முன்பு இதற்காக குரல் கொடுத்தவர். அந்த குரலுக்கு வெற்றியை தேடித்தர வேண்டுமென்று தான் சோனியா வழிகாட்டுதலோடு, மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தொடர்ந்து வலியுறுத்தி, வலியுறுத்தி செம்மொழி என்ற தகுதியை இன்று பெற்றிருக்கிறோம்.
அப்படி பெறுவதற்கு காரணமாக இருந்த குடும்பம் பரிதிமாற் கலைஞர் குடும்பம்; சூரிய நாராயண ‘சாஸ்திரி’ குடும்பம். சாஸ்திரி அல்லவா முதல் குரலை எழுப்பினார். அதை ஏன் தொட வேண்டும் என்று  நான் சும்மா இருந்துவிடவில்லை. யார் குரல் எழுப்பினாலும், அது எதற்காக ஒலித்தது என எண்ணிப் பார்த்து அதற்காக பாடுபடும் இயக்கம் தான், நான் சார்ந்திருக்கிற இயக்கம்.
அத்தகைய தமிழ்த் தொண்டு, தமிழ்ப் பற்று ஆகியவற்றை நெஞ்சில் பதிய வைத்து அதனுடைய ஒலி, ஒளி இரண்டையும் தாங்குகின்ற வகையில் ‘தினமலர்’ நம்முடைய டி.வி.ஆர்., அவர்களால்  தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 10 பதிப்புகளாக  பரவி மக்களை மகிழ்வித்துக்கொண்டு இருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமையடைகின்றேன்.
தமிழகத்தில் பல பத்திரிகைகள் தினசரி, வாரப்பத்திரிகைள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. அதில் சிலர் தாக்குவதும் உண்டு, தாங்குவதும் உண்டு. தாக்கினாலும், தாங்கினாலும் என்ன சொல்கின்றனர் என்பதை அறிந்து, சொன்னது என்ன என்று எண்ணிப் பார்கிற பொறுப்பும், கடமையும் எனக்கு உண்டு; என்னைப் போன்றவர்களுக்கு இருக்க வேண்டும். இந்த விழாவில் கலந்துகொண்டதில் பெருமையடைகிறேன். டி.வி.ஆரை பெருமைப் படுத்தி அஞ்சல்தலை வெளியிட்ட ராஜாவையும், மத்திய அரசையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
 
டி.வி.ஆர்., - இ.வி.ஆர்.,
டி.வி.ஆரையும், ஈ.வெ.ரா.,வையும் ஒப்பிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
டி.வி.ஆரின் திருமணம் பால்ய விவாகம். அந்தத் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு  11 வயது; பெண்ணுக்கு எட்டு வயது. இன்றைக்கு அந்தத் திருமணத்தை நடத்தினால் சட்டப்படி அது தடுக்கப்பட்டு இருக்கும்; தண்டிக்கப்பட்டு இருப்பர். திருமணத்திலேயே ஒரு சுயமரியாதை சுதந்திர உணர்வோடு நடத்தியிருக்கிறார்.
‘என் கணவருக்கு வைதீகத்தில் நம்பிக்கை கிடையாது. ஜாதகம், ஜோதிடம் இவைகளையெல்லாம் டி.வி.ஆர்., நம்புவதில்லை; அவற்றை அலட்சியப்படுத்துவார்’ என்று அவரது துணைவியாரே கூறியிருக்கிறார். அப்போதே, டி.வி.ஆர்.,- ‘இ.வி.ஆராக’ (ஈ.வெ.ரா.,) இருந்திருக்கிறார். டி.வி.ஆர்., அத்தகைய பெருந்தகையாக இருந்துள்ளார்.
ஒரு பத்திரிகை நடத்துவது என்றால் எவ்வளவோ கஷ்டங்கள், இடையூறுகள், சிக்கல்கள், இன்னல்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டும். இவ்வளவையும் மீறி, இவைகளையெல்லாம் சந்தித்து, சமாளித்துத்தான் பத்திரிகை நடத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பெரிய பணியை இன்றைக்கும் தமிழகத்தில் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பவர்களில் மிக முக்கியமானவராக இருந்தவர் நம்முடைய அன்புக்குரிய மறைந்தும், மறையாத டி.வி.ஆர்., . இவ்வாறு முதல்வர் பேசினார்.

இலவசம் கொடுக்கும் பழக்கம்
இலவசம் கொடுக்கும் பழக்கம் தனக்கு வந்தது பற்றி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
ஒரு பத்திரிகையாளருடைய தபால்தலையை வெளியிட, ஒரு பத்திரிகையாளனான நானே  வந்திருப்பதாக மத்திய அமைச்சர் ராஜா குறிப்பிட்டார். எடுத்த எடுப்பில் தினமலர் நாளிதழைப் போல் அந்த அளவுக்கு, அவ்வளவு அகலத்தில், அவ்வளவு நீளத்தில், அத்தகைய அச்சுக்கோப்போடு, படங்களோடு நான் பத்திரிகை நடத்தியவன் அல்ல.
கடந்த 1942ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரமாக, ‘முரசொலி’யை வெளியிட்டுக் கொண்டு இருந்தேன். அந்த இலவச வெளியீட்டை வாங்கிப் படிப்பவர்கள் நாட்டு நடப்பு, சமுதாய நடப்பு ஆகியவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடும், நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின்  கொள்கைகளை பரப்புகிற வழியாகவும், அன்று நான் அதை கடைபிடித்தேன்.
ஒரு துண்டு வெளியீட்டையே அன்றைக்கு இலவசமாக வழங்கிய காரணத்தால், இன்று முதல்வரான பிறகும் இலவசமாக பலவற்றை வழங்கும் பழக்கம் என்னை தொற்றிக் கொண்டுள்ளது. இது தேவைதானா, இப்படியெல்லாம் இலவசமாக கொடுத்தால் என்னாவது என்று சில பத்திரிகைகள் எல்லாம் விமர்சித்து எழுதுகின்றன. அப்படி விமர்சிப்பது ‘தினமலர்’ அல்ல. இவ்வாறு முதல்வர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us