அகிம்சை தொடர்பான ஆராய்ச்சி: கைதி எம்.எல்.ஏ.,வுக்கு டாக்டர் பட்டம்
அகிம்சை தொடர்பான ஆராய்ச்சி: கைதி எம்.எல்.ஏ.,வுக்கு டாக்டர் பட்டம்
UPDATED : டிச 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பாட்னா: பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பீகார் எம்.எல்.ஏ., ஒருவர், ஆராய்ச்சி படிப்பிற்கான டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
ஆராய்ச்சிக்காக இவர் எடுத்துக் கொண்ட தலைப்பு மகாவீரரின் அகிம்சை போதனைகள். பீகார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., நரேந்திர குமார் பாண்டே. இவர் மீது, ஆள் கடத்தல், கோர்ட் அவமதிப்பு, மிரட்டல் உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. ஆள் கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இன்னும் ஏராளமான வழக்குகளில் இவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீடியாவில் பணிபுரிவோரையும், போலீசாரையும் மிரட்டியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. தொடர் குற்றச்சாட்டை அடுத்து, நரேந்திர குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இவர் பாட்னாவில் உள்ள பெயூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இவரது மன நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டதோ தெரியவில்லை. மகாவீரரின் அகிம்சை போதனைகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, வீர் கீயர் சிங் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஏராளமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர், அகிம்சை போதனைகள் தொடர்பான ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும், குற்ற பின்னணி உள்ள வி.ஐ.பி.,க்கள் இதுபோன்ற ஆராய்ச்சி படிப்புக்கான டாக்டர் பட்டம் பெறுவது இது முதல் முறையல்ல. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சர்ச்சைக்குரிய எம்.பி., முகமது சகாபுதீன், அரசியல் அறிவியல் பாடத்தில் ஏற்கனவே டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
