சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் நியமனம் செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் நியமனம் செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு
UPDATED : டிச 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., இயக்குனராக ஆனந்த் 2001ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2006ம் ஆண்டு டிசம்பரில் முடிந்தது. மீண்டும் இயக்குனராக ஆனந்தை நியமிக்க தேர்வுக் குழு பரிந்துரைத்தது.
அதையடுத்து, மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது அடையும் வரை இயக்குனராக தொடர அனுமதியளிக்கப்பட்டது. இவரது நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முரளிதரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். மனுதாரரான முரளிதரன், ‘தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சட்டப்படி, ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யின் இயக்குனரும் கவுன்சில் மூலம் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு, முன் கூட்டியே ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், ஆனந்தை கவுன்சில் நியமிக்கவில்லை’ என வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சட்டப்படி, ஐ.ஐ.டி., யின் இயக்குனரை அதற்கான கவுன்சில் தான் நியமிக்க வேண்டும் (மத்திய தொழில்நுட்ப கல்வி அமைச்சர் தலைமையில் எம்.பி.,க்கள், யு.ஜி.சி., தலைவர், ஐ.ஐ.டி., நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கவுன்சில்). ஆனந்த் நியமனத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருப்பதாக கடந்த ஆண்டு ஜூன் 28ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., தலைவருக்கும், ஆனந்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கையெழுத்திடப்பட்ட இந்த முத்திரைத் தாள், கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி வாங்கப்பட்டுள்ளது. இவர்களின் நடத்தையில் இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனரை கவுன்சில் நியமிக்கவில்லை. இவரது நியமனம் குறித்து கவுன்சிலுக்கு தெரியவில்லை.
எனவே, இயக்குனராக ஆனந்த் எப்படி தொடர முடியும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. கடந்த காலங்களில் உள்ள நடைமுறையைப் பின்பற்றியதாகக் கூறுவதை ஏற்க முடியாது. இயக்குனர் பதவிக்கு விண்ணப்பங்களைக் கோரி பொது அறிவிப்பு கூட வெளியிடப்படவில்லை; விளம்பரமும் வெளியிடப்படவில்லை.
இத்தகைய கவுரவமிக்க பதவிகளுக்கு பெரிய அளவில் விளம்பரங்கள் கொடுத்திருக்க வேண்டும். ஜனாதிபதிக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்ட குறிப்பில், கவுன்சில் இந்த முடிவை எடுக்கவில்லை என குறிப்பிடப்படவில்லை. இரண்டாவது முறையாக ஆனந்த் நியமிக்கப்படுவார் என அவருக்கு முன்கூட்டி தகவல் தெரிந்துள்ளது. ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே முத்திரைத் தாளை வாங்கியதில் இருந்து தெரிகிறது.
எனவே, ஐ.ஐ.டி., இயக்குனராக ஆனந்தை கவுன்சில் நியமிக்கவில்லை. சட்டப்படி இவரது நியமனம் இல்லை. இம்மனு ஏற்கப்படுகிறது. வழக்கு செலவுத் தொகையை 5,000 ரூபாயை ஆனந்திடம் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
