வங்கி அதிகாரிகளின் அலட்சியம்: மாணவிகளுக்கு நேரும் அவலம்
வங்கி அதிகாரிகளின் அலட்சியம்: மாணவிகளுக்கு நேரும் அவலம்
UPDATED : டிச 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடலூர்: வங்கி அதிகாரிகள் அலட்சியத்தால் தேசிய திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையின மாணவிகளுக்கான கல்வி ஊக்குவிப்புத்தொகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் அறிவித்து வருகின்றன. பெண்களுக்கு படிப்பறிவு அவசியம் என்பதற்காக படித்த ஏழை பெண்களுக்கு திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நடத்தி வருகின்றன.
பெண்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய திட்டத்தின்கீழ் இடைநிலைக் கல்வி மாணவிகளுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை 3,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையின மாணவிகளுக்கு 16 வயது நிறைவு பெறாத மாணவிகளுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை 3,000 ரூபாயை வங்கிளில் வைப்புத் தொகையாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 10ம் வகுப்பு முடித்ததும் வங்கிகளில் சான்றிதழை காண்பித்து வட்டியுடன் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக தமிழகத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளிலிருந்து ஊக்குவிப்புத் தொகை பெற தகுதியுடைய மாணவிகளின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என இயக்குனர் அலுவலகத்திலிருந்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே மாணவிகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தை வங்கிகளில் செலுத்துவதற்கு வசதியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ‘பூஜ்ஜியம் நிலுவை கணக்குகளை’ துவக்க இந்திய வங்கிகளின் சங்க முதன்மை நிர்வாக அலுவலருக்கு மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித் துறையை பொறுத்த மட்டில் கடந்த ஜூலை மாதம் துவக்கத்திலிருந்து இதற்கான பணிகள் துவங்கப்பட்டு எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையின மாணவிகளின் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து மாணவிகளுக்கு தனித்தனியாக வங்கிகளில் கணக்கு துவங்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவிகளுக்கு ‘பூஜ்ஜியம்’ நிலுவை கணக்கை துவங்க வங்கிகளுக்கு சென்றால் வங்கி அதிகாரிகள் ‘பூஜ்ஜியம்’ நிலுவையில் கணக்கை துவங்க முடியாது. 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் பணம் கட்டி சேமிப்பை துவக்க வேண்டும் என கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டம் என எடுத்துக் கூறினாலும் அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சில பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கணக்குத் துவங்க வேண்டும் என சென்றால் ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு எங்களால் கணக்குத் துவங்க முடியாது என மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா 3,000 ரூபாய் என்றால் 37 கோடியே 50 லட்சம் மத்திய அரசு நிதி செலவிடும். இந்த நிதி முழுமையாக மாணவிகளுக்கு போய் சேர வேண்டும் என்றால் வங்கி அதிகாரிகள் மனது வைக்க வேண்டும். இல்லையென்றால் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் மத்திய அரசு நிதியை திரும்ப பெற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படும்.
அரசு, மக்களுக்காக எவ்வளவோ நல்ல திட்டங்களை வகுத்தாலும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும் திட்டப் பலன்கள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடையாமல் விழலுக்கு இறைத்த நீராக போய்க் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.
