விடுமுறை நாளில் சான்றிதழ்: ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் அதிருப்தி
விடுமுறை நாளில் சான்றிதழ்: ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் அதிருப்தி
UPDATED : ஜன 16, 2009 12:00 AM
ADDED : ஜன 16, 2009 11:05 AM
கோவை: ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறையன்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதால், பல மாணவர்களின் பதிவு மூப்பு பாதிக்கப்படுகிறது.
இதைத் தவிர்க்க, வரும் ஆண்டுகளில் இருந்து, பணி நாட்களில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2007-08ல் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இரு வாரங்களுக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜன.,18ல் வழங்கப்படும் என, உடுமலையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி மையம் (டயட்) அறிவித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சி போன்ற தொழில் சார்ந்த படிப்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் நாளுக்கு மாணவர்கள் ஆவலுடன் காத்திருப்பது வழக்கம். இந்நிலையில், ‘மதிப்பெண் சான்றிதழ் ஞாயிறன்று (18ம் தேதி) வழங்கப்படும்; அச்சான்றிதழை அன்றைய தினமே கண்டிப்பாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று ‘டயட்’ முதல்வர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆனால், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பல மாணவ, மாணவியர் வெளியூர் சென்றதால், ஞாயிறன்று வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழை அன்றைய தினமே பெற முடியாத நிலை உள்ளது. ஞாயிறன்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே, திங்களன்று காலை வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்ய முடியும். ஆகவே, இந்த நடைமுறையை மாற்றி ஏதாவது பணி நாட்களில் சான்றிதழ் வழங்கும்படி மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ‘டயட்’ முதல்வர் சுப்பிரமணியம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஞாயிறன்று தான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனால் மறுநாள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முன்னரே பதிவு செய்ய முடியும் என்பதால், அதன் அடிப்படையில் சீனியாரிட்டி கிடைக்கும். இது குறித்து, ஒரு வாரம் முன்பே ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் மாணவர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்திருக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாள் விபரம் மாணவர்களுக்கு தெரியவில்லை என்றால், அதற்கு அந்தந்த பள்ளி முதல்வர்களே பொறுப்பு. இவ்வாறு, சுப்பிரமணியம் தெரிவித்தார்.
