சிறுபான்மை அந்தஸ்தால் நிகர்நிலையாகும் கல்வி நிறுவனங்கள்
சிறுபான்மை அந்தஸ்தால் நிகர்நிலையாகும் கல்வி நிறுவனங்கள்
UPDATED : ஜன 20, 2009 12:00 AM
ADDED : ஜன 20, 2009 02:23 PM
சென்னைப் பல்கலையின் 151வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உத்தரப்பிரதேச கவர்னர் ராஜேஸ்வர் பேசியதாவது:
கல்வித்துறையில் தனியார் நுழைந்த பின்பும், மாணவர்களுக்குச் சிறந்த கல்வி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய அறிவுசார் ஆணையம் உயர்கல்வி குறித்து பல பரிந்துரைகளைச் செய்துள்ளது. ‘பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்’ என கடந்த ஆண்டு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இவற்றோடு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலையும் இந்த ஆய்வில் சேர்க்க வேண்டும்.
பிரதமரால் அமைக்கப்பட்டுள்ள யஸ்பால் கமிட்டி தனது பரிந்துரைகளில், ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் அதற்கேற்ப சிறந்த கல்வியை வழங்குவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பும் இல்லாமலே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படுகின்றன.
ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் கல்லூரியைத் துவக்கி, அதன்மூலம் மொழி சிறுபான்மை அந்தஸ்தைப் பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், உத்தரப்பிரதேசத்தில் மொழி சிறுபான்மை அந்தஸ்தின்கீழ் மருத்துக் கல்லூரியைத் துவங்கி அதை நிகர்நிலைப் பல்கலையாக மாற்றியுள்ளார். கல்வி நிறுவனங்களுக்கு மொழி சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படுவது குறித்தும் யஸ்பால் கமிட்டி ஆய்வு செய்ய வேண்டும்.
பல்கலை மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர் அமைப்புகளால் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த ஆண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் போன்று எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படக் கூடாது.
கல்வி, இலக்கியம், சமுதாய மாற்றங்களை ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் இன்னும் தீண்டாமை உள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்னமும் இரட்டை டம்ளர் முறை உள்ளது. இதுபோன்ற மூடப்பழக்க வழக்கங்களைப் போக்கும் வகையில் விழிப்புணர்ச்சியை இளம் பட்டதாரிகள் ஏற்படுத்த வேண்டும்.
மடாதிபதிகளும், மதத்தலைவர்களும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமல்லாது சமுதாய மாற்றங்கள் ஏற்படவும் பாடுபட வேண்டும். இவ்வாறு கவர்னர் ராஜேஸ்வர் பேசினார்.
முன்னதாக, சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, எலும்பு முறிவு மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை கவர்னர் பர்னாலா வழங்கினார். விருது பெற்ற மாணவர்கள் மற்றும் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு கவர்னர் சான்றிதழ்களை வழங்கினார்.
வட்டி இல்லாத வங்கி குறித்த பட்ட ஆய்விற்காக த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லாவிற்கும், தமிழக தபால்துறையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் குறித்த ஆய்விற்காக தபால்துறை தலைவர் ராமச்சந்திரனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னைப் பல்கலை துணைவேந்தர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
