சமச்சீர் கல்வி திட்டம் குறித்து பிற மாநிலங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு
சமச்சீர் கல்வி திட்டம் குறித்து பிற மாநிலங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு
UPDATED : ஜன 21, 2009 12:00 AM
ADDED : ஜன 21, 2009 11:05 AM
சென்னை:
கல்வித்துறை அதிகாரிகள் குழு தனித்தனியே பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று சமச்சீர் கல்வித்திட்டம் தொடர்பாக ஜனவரி 21ம் தேதி முதல் ஆய்வு செய்கிறது.
ஆய்வு முடிவில், அதிகாரிகள் குழு அளிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., அரசு பதவியேற்றதும், சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிவித்தது.
நான்கு வகையான கல்வி முறைகளை ஒரே வகையாக ஒருங்கிணைத்து, எல்லா மாணவர்களும் ஒரே பாடத்திட்டத்தை படிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டிலேயே இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அமலுக்கு வரவில்லை. வரும் கல்வி ஆண்டிலாவது அமலுக்கு வருமா என்பதும் கேள்விக்குறியே.
இந்தத் திட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருவதற்கு எஸ்.எஸ்.ஏ., திட்ட முன்னாள் இயக்குனர் விஜயகுமார் தலைமையில் உயர்நிலைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர் - செயலராக ராஜராஜேஸ்வரி (பள்ளிக் கல்வி இணை இயக்குனர்), உறுப்பினர்களாக ஜெகந்நாதன் (ஓய்வு பெற்ற, கல்வித்துறை இயக்குனர்), நளினி ரவீந்திரன் (கல்லூரிக் கல்வி இயக்குனர்), சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சூசைராஜ் உள்ளனர்.
பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி, தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி சிறப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தனித்தனி குழுக்களாக, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, அங்குள்ள கல்வி முறைகளை முதல் ஆய்வு செய்கின்றனர்.
பெரும்பாலான மாநிலங்களில் மத்திய அரசு பாடத் திட்டம், மாநில அரசு பாடத்திட்டம் என இரண்டு வகையான கல்வி முறை மட்டும் உள்ளது. இதேபோன்ற முறையை தமிழகத்திலும் கொண்டு வருவது குறித்து, அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய உள்ளது. இறுதியாக உயர்நிலைக் குழு தரும் அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
