UPDATED : ஜூன் 19, 2014 12:00 AM
ADDED : ஜூன் 19, 2014 10:43 AM
புதுச்சேரி: பிரெஞ்சு இந்திய தபால் தலை மற்றும் நாணயம் சேகரிக்கும் சங்கத்தின் சார்பில், தபால் தலை மற்றும் நாணயங்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் செயலாளர் ஜெயசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நாணயங்கள், தபால் தலை சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி புஸ்சி வீதியில் உள்ள ரோஸ்மா திருமண மண்டபத்தில் 20ம் தேதி (நாளை) துவங்கி 22ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் பழமையான பிரெஞ்சிந்திய ரூபாய் நோட்டுகள், ஆங்கிலோ இந்திய நோட்டுகள், அரிய வகை நாணயங்கள், தபால் தலைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
தபால் தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்பவர்கள் நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். கண்காட்சியில் தபால் தலை மற்றும் நாணயங்கள் விற்பனையும் உண்டு. கண்காட்சியை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம்.
மேலும், தபால் துறை சார்பில், கண்காட்சியில், தனி அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதில், மை ஸ்டாம்ப்ஸ் என்ற தலைப்பில் விருப்பப்படுபவர்களின் போட்டோவுடன் கூடிய தபால் தலை உடனடியாக வழங்கப்பட உள்ளது.
இக்கண்காட்சியை வரும் 20ம் தேதியன்று மதியம் 12:00 மணிக்கு நல அமைச்சர் ராஜவேலு துவக்கி வைக்கிறார். அஞ்சல் அலுவலகங்களின் சீனியர் கண்காணிப்பாளர் கனகராஜன் வாழ்த்தி பேசுகிறார். விழாவில் தபால் தலை மற்றும் நாணயம் சேகரிப்பில் சிறந்து விளங்குபவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இவ்வாறு ஜெயச்சந்திரன் கூறினார்.
சங்கத்தின் நிர்வாகிகள் சித்தரஞ்சன், செல்வராஜ், சேதுராமன், பிரமோத்குமார் ஜெயின் உடனிருந்தனர்.
