வளர் இளம் பருவத்தினருக்கு, இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி
வளர் இளம் பருவத்தினருக்கு, இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி
UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM
ADDED : ஜூன் 20, 2014 11:53 AM
கரூர்: கரூர் மாவட்டம், தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரத் துறை மூலம், வளர் இளம் பருவத்தினருக்கு, இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில், 10 முதல், 19 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கி கலெக்டர் பேசியதாவது: தமிழக முதல்வர், பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான், முழுமையான கல்வியைப் பெற முடியும், என்ற நோக்குடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
வளர் இளம் பருவத்தில், போதிய இரும்புச்சத்து இல்லாத நிலையை கண்டறிந்து, அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை, பொது சுகாதார துறையினர், இரும்பு சத்து மாத்திரை வழங்க உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளிகளில் இரும்புச் சத்து மாத்திரை வழங்கப்படும்.
உடலில் போதிய இரும்புச்சத்து இருந்தால் தான், நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ரத்த சோகை போன்ற நோய்கள் தாக்குதல் இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் கல்வியில் கவனம் செலுத்த முடியும். எனவே, மாணவ, மாணவிகள் தவறாது இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதுடன், மருத்துவ முகாமிலும் பங்கேற்று உடல்பரிசோதனை செய்து கொண்டு ஆரோக்கியமுடன் வாழவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
தொடர்ந்து, தாந்தோணி அங்கன்வாடி மையத்திற்கு சென்று, அங்கு வளர் இளம் பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை வழங்கினார்.
